வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் பொதுச் சபை உருவாக்கப்பட்டுள்ளது - 83 சிவில் அமைப்புக்கள் ஆதரவு தெரிவித்துள்ளன
வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தி தமிழ் மக்கள் பொதுச்சபை உருவாக்கப்பட்டுள்ளதுடன் இதற்கு 83 சிவில் அமைப்புக்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.
குடிமக்கள் சமூகக் கூட்டிணைவின் 30.04.2024 வவுனியாத் தீர்மானத்தின் தொடர்ச்சியாக இரண்டாவது பொதுச்சபைக் கூட்டம் புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.
அதில், இதுவரை வடக்கு கிழக்கு சிவில் அமைப்புக்களின் கூட்டிணைவு என்று அழைக்கப்பட்ட தமிழ் குடிமக்கள் சமூகத்தின் கட்டமைப்பை இனிமேல், தமிழ் மக்கள் பொதுச்சபை என அழைப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.
ஜனாதிபதித் தேர்தலுக்கான தமிழ்ப் பொதுவேட்பாளர் விடயத்தில் அரசியல் கட்சிகள் தங்கள் முடிவுகளை உத்தியோகபூர்வமாக அறிவித்து முடித்தவுடன் பரஸ்பர புரிந்துணர்வு அடிப்படையில் ஒரு பொதுக்கட்டமைப்பை உருவாக்கி செயற்படுவது என ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது.
அத்துடன் தமிழ் மக்கள் பொதுச்சபைக்கான ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட வழிகாட்டல் குழுவும் இருபத்தி ஐந்து பேரை உள்ளடக்கிய தலைமை ஒருங்கிணைப்புக் குழுவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.
தலைமை ஒருங்கிணைப்புக்குழுவில் இருந்து தமிழ் மக்கள் சபைக்குரிய செயற்குழுக்கள் தெரிவுசெய்யப்படும் என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதத்தின் இறுதி சனிக்கிழமைகளில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தமிழ் மக்கள் பொதுச்சபை கூடி தேவையான முடிவுகளை எடுக்கும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.