எம்.பி சிறீதரன் ஊடாக வடக்கிலிருந்து 10 பேர் கொண்ட குழு இந்தியாவுக்கு பேச்சுவார்த்தைக்கு செல்லத் தயார். நா.வர்ணகுலசிங்கம் தெரிவிப்பு

4 hours ago



நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் ஊடாக வடக்கு மாகாணத்திலிருந்து 10 பேர் கொண்ட குழு ஒன்று இந்தியாவுக்கு பேச்சுவார்த்தைக்கு செல்வதற்கான வழிவகைகளை நாங்கள் செய்து கொண்டிருக்கின்றோம். கூடிய விரைவில் அது கைகூடலாம்."-இவ்வாறு வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தின் உப தலைவர் நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"எமது கடற்பரப்பில் தமிழ், சிங்கள புத்தாண்டில் இருந்து எமது மக்கள் தொழிலுக்கு செல்லவில்லை.90 வீதமானோர் இவ்வாறு தொழிலுக்கு செல்லவில்லை.

இந்திய இழுவை படகுகளால் அவர்களது வலைகள் அறுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு எமது மீனவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பிரச்சினைக்கு இரண்டு நாட்டு அரசாங்கங்களும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுகின்றோம்.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் தமிழ் நாட்டில் நடந்த அயலக மாநாட்டில் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மீனவர் பிரச்சினை தொடர்பில் பேசியிருந்தார். இதனை நாங்கள் வரவேற்கின்றோம்.

அதேபோல், நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் ஊடாக வடக்கு மாகாணத்திலிருந்து 10 பேர் கொண்ட குழு ஒன்று இந்தியாவுக்கு பேச்சுவார்த்தைக்கு செல்வதற்கான வழி வகைகளை நாங்கள் செய்துகொண்டிருக்கின்றோம். கூடிய விரைவில் அது கைகூடலாம்,

நாங்கள் உண்டியலை குலுக்கி காசுகளை கொள்ளையடிக்கவில்லை.

இந்தியாவில் பேச்சு நடத்தப்போகின்றோம் என்று கூறி உண்டியலில் நிதி சேகரித்தார். ஆனால், எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை.

அந்த பணம் எல்லாம் யார் எடுத்தது?

நாங்கள் சட்டவிரோத மீன்பிடியை நிறுத்துமாறு தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றோம்.

ஆனால், இதுவரை அவ்வாறு நிறுத்தப்படவில்லை.

அப்படியானால், சட்டவிரோத மீன்பிடிக்கு அனைவருக்கும் அனுமதி வழங்குங்கள்.

புதிய கடற்றொழில் அமைச்சர் சட்டவிரோத மீன்பிடியை உடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுக்கின்றோம்.

எமது மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்."என்றார்.