மினுவாங்கொடையில் கொள்ளையடித்தவர்கள் படகைப் பிடித்து இந்தியா தப்பிச் செல்ல யாழ்.படகுகாரர்கள் ஏற்கவில்லை.-- யாழ்.பொலிஸார் தெரிவிப்பு
மினுவாங்கொடையில் ஏழு கோடி ரூபாவை கொள்ளையடித்த வாகனச் சாரதியும் அவரது நண்பரும் இணைந்து யாழ்ப்பாணத்தில் உள்ள மீன்பிடிப் படகுக்கு ஐந்து இலட்சம் ரூபாவைச் செலுத்தி இந்தியாவுக்கு தப்பிச் செல்லும் நோக்கில் ஒப்பந்தம் வழங்கியதாகவும், ஆனால் யாழ். படகுகாரர்கள் அதனை ஏற்கவில்லை எனவும் யாழ்.பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்கள் இருவரும் இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல யாழ்ப்பாணத்தில் நயினாதீவுக்குச் சென்றனர்.
அங்கு அவர்கள் குறிகாட்டுவான் துறைமுகத்தில் சில படகோட்டிகளுடன் கலந்துரையாடினர்.
நயினாதீவு, நாக விகாரையை வழிபட்டு, விகாரைக்கு எட்டுப் பிரசாதம் வழங்கிய இந்த இரண்டு சந்தேக நபர்களும், கடற்படை அதிகாரிகள் சிலரைச் சந்தித்த போது எப்படி இந்தியா செல்வது என்றும் கேட்டுள்ளனர்.
ஆனால் இந்த இரண்டு சந்தேக நபர்களையும் கடற்படையினரால் அடையாளம் காண முடியவில்லை என்பதுடன் அவர்கள் மீது எந்தவித சந்தேகமும் எழவில்லை.
யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியா செல்வது கடினம் என்பதால், மன்னார் சென்று அங்குள்ள படகு ஓட்டிகளைச் சந்தித்து கலந்துரையாட வேண்டும் என யாழ்.படகு உரிமையாளர்களிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் மன்னார் செல்ல முயன்றுள்ளனர்.
ஆனால் அதற்கு முன்னதாக மினுவாங்கொடையில் இருந்து வாடகை அடிப்படையில் அவர்கள் யாழ்ப்பாணம் வந்த வாகனம் மற்றும் இருவர் பொலிஸாரிடம் சிக்கியுள்ளனர்.
மினுவாங்கொடையில் இருந்து யாழ்ப்பாணம் வருவதற்கு ஐந்து இலட்சம் ரூபாவுக்கும் மேல் இக் குழுவினர் செலவு செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
திருடப்பட்ட ஏழு கோடி ரூபாயில் ஏறக்குறைய நான்கு கோடி ரூபாயை பொலிஸார் மீட்டுள்ளனர்.