இலங்கை கடலுக்குள் இந்திய படகின் அத்துமீறலை தடுத்து நிறுத்தக் கோரி கையெழுத்திட்ட தபாலட்டைகள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு
இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்களை உடனடியாக தடுத்து நிறுத்தக் கோரி கையெழுத்திடப்பட்ட தபாலட்டைகள் ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்கவுக்கு முல்லைத்தீவு மக்களால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
கார்த்திகை 21 சர்வதேச மீனவர் தினம். இதனை முன்னிட்டு சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் இந்த தபாலட்டைகள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
சர்வதேச மீனவர் தினத்தில் இலங்கை முழுவதுமாக விசேடமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகளினுடைய அத்துமீறல்களும், முல்லைத்தீவு கடற்பரப்பில் காணப்படுகின்ற கடற் திரவியங்கள் அனைத்தும் இந்திய இழுவைப் படகுகள் மூலமாக அபகரித்து செல்லுகின்ற துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குச் சென்று பெரும் நஷ்டத்துடனே கரை திரும்புகின்றனர்.
அவர்கள் வாழ்க்கையை பெரும் இடர்பாடுகளுக்கு மத்தியிலேயே கழித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் முல்லைத்தீவு மக்கள், முல்லைத்தீவு மீனவர்களால் பெயர், முகவரி குறிப்பிட்டு கையெழுத்திடப்பட்ட தபாலட்டையை அனுப்பி வைக்கும் முகமாக 500இற்கும் மேற்பட்ட தபாலட்டைகள் முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்திய இழுவைப் படகுகளை இலங்கை கடற்பரப்புக்குள் வரவிடாது தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு கோரியே இந்த தபாலட்டைகள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.