இலங்கை இனப்படுகொலைகள் தொடர்பில் ஆதாரங்கள் திரட்டும் பொறிமுறையை வலுப்படுத்த வேண்டும் -- எம்.பி பொ.கஜேந்திரகுமார் வலியுறுத்து

2 months ago



இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைகள் தொடர்பில் ஆதாரங்கள் திரட்டும் பொறிமுறையை வலுப்படுத்த வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும், இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஷூக்கும் இடையில் நேற்றுமுன்தினம் இரவு யாழ்ப்பாணத்தில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போதே, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தாம் புதியதொரு அரசியல் கலாசாரத்தைக் கட்டியெழுப்பப் போவதாக ஏற்கனவே கூறியிருந்தாலும், தற்போதுவரை எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.

கடந்த காலத்தை ஒத்த நிலை வரமே இப்போதும் தொடர்கிறது என்ற விடயத்தையும் கனேடியத் தூதுவரின் கவனத்துக்கு கஜேந்திரகுமார் எம்.பி. கொண்டு சென்றார்.

அதேபோன்று பயங்கரவாதத் தடைச்சட்டத்தை முற்றாக நீக்குதல், அரசியல் கைதிகளை விடுவித்தல் என்பன உள்ளடங்கலாக அரசாங்கத்தால் முன்னர் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இன்னமும் உரியவாறு நிறைவேற்றப்படவில்லை என்றும் கஜேந்திரகுமார் எம்.பி. இதன் போது தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பெருமளவுக்கு வலுவற்றதெனினும், இலங்கையில் இடம்பெற்ற கடந்தகால மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆதாரங்களைத் திரட்டும் செயன்முறை வரவேற்கத்தக்கதாகும்.

அந்தச் செயற்றிட்டத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் ஆணை மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும். அதற்குரிய அழுத்தங்களை இணையனுசரணை நாடுகளில் ஒன்றான கனடா வழங்கவேண்டும்.

அத்துடன் கனடாவில் உள்ள சமஷ்டி தொடர்பான தெளிவூட்டலையும் இலங்கைக்கு கனடா வழங்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார். 

அண்மைய பதிவுகள்