யாழ்.போதனா வைத்தியசாலைக்கு ஆளணி நிரப்பப்பட வேண்டியுள்ளது - யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவிப்பு

7 months ago

யாழ்.போதனா மருத்துவமனையை, தேசிய மருத்துவமனையாக தரமுயர்த்துவதற்கு ஆளணி நிரப்பப்பட வேண்டியுள்ளது என்று யாழ்.போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

யாழ்.போதனா மருத்துவமனையில் நேற்று(04) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

இலங்கையின் நான்காவது தேசிய மருத்துவமனையாக யாழ். போதனா மருத்துவமனையை தரமுயர்த்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தரமுயர்த்தப்படுவதாயின், யாழ்.போதனா மருத்துவமனைக்கு இருக்கும் தேவைப்பாடுகள் தொடர்பில் தெரிவித்துள்ளோம்.

யாழ்.போதனா மருத்துவமனையில் ஆயிரத்து 350 படுக்கைகளுடனான விடுதிகள் தற்போது காணப்படுகின்றன.

325 மருத்துவர்கள், 680 தாதிகள் உட்பட 2 ஆயிரத்து 150 பேர் தற்போது கடமை புரிந்து வருகின்றனர்.

இவ்வாறிருக்கையில், தேசிய மருத்துவமனையாகத் தரமுயர்த்தப்படுவதாயின் 200 மேலதிக தாதியர்களும், 100 மருத்துவர்களும் தேவைப்படுகின்றனர்.

மருத்துவர்களுக்கான வெற்றிடங்கள் ஓரளவு நிரப்பப்பட்ட போதிலும், மருத்துவ நிபுணர்களுக்கு இன்னமும் பற்றாக்குறை காணப்படுகின்றது.

சிறப்புப் பிரிவுகள், இருதய சிகிச்சை மற்றும் இருதய சத்திர சிகிச்சை என்பவற்றுக்கு மருத்துவர்கள் பற்றாக்குறை காணப்படுகின்றது.

எனவே இவற்றை நிவர்த்திசெய்ய சுகாதார அமைச்சு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளவேண்டும் - என்றார்.

அண்மைய பதிவுகள்