காஸா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் இதுவரை 10,000 மாணவர்கள் மற்றும் 400 ஆசிரியர்கள் பலி

5 months ago


காஸா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் இதுவரை 10,000 மாணவர்கள் மற்றும் 400 ஆசிரியர்கள் பலியானதாக பலஸ்தீன கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

நாளுக்கு நாள் காஸா போர் தீவிரமடைந்து வரும் நிலையில், இஸ்ரேலிய இராணுவம் புதிய வெளியேற்ற உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இந்த நிலையில், மத்திய காஸா பகுதியில் உள்ள புரேஜ் மற்றும் நுசிராத் அகதிகள் முகாம்களில் இருந்து பலஸ்தீனர்கள் வெளியேறி வரு கின்றனர். 86 சதவீத காஸா மக்கள் தங்கள் இருப்பிடங்களில் இருந்து வெளியேறிவிட்டனர் என்று பலஸ்தீன அகதிகளுக்கான ஐ. நா. அமைப்பு தெரிவித்துள்ளது.

காஸாவின் இரண்டு முக்கிய தெற்கு நகரங்களான ரபா மற்றும் கான் யூனிஸ் ஆகியவற்றில் நாளுக்கு நாள் மோதல் அதிகரித்த வண்ணம் உள்ளது என அந்தப் பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். கடந்த ஆண்டு, ஒக்டோபர் 7 ஆம் திகதி அன்று தொடங்கிய காஸா மீதான இஸ்ரேலின் போரில் 39, 363 பேர் இதுவரை உயிரிழந்தனர். மேலும் 90, 923 பேர் காயமடைந்துள்ளனர். ஹமாஸ் தலைமையிலான தாக்குதல்களின் போது இஸ்ரேலில் 1,139 பேர் கொல்லப்பட்டனர். 200இற்கும் மேற்பட்டோர் சிறைபிடிக்கப்பட்டனர்.

இதேவேளை, காஸாவில் போர் தொடங்கியதில் இருந்து, தற்போது வரை சுமார் 10,000 மாணவர்கள், 400 ஆசிரியர்களும் கொல்லப்பட்டதாக பலஸ்தீன கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் உள்ள 76 சதவீதத்துக்கும் அதிகமான பாடசாலைகள் செயல்படுவதற்கு முழு புனரமைப்பு தேவை என்று ஐ. நா. தெரிவித்துள்ளது.



அண்மைய பதிவுகள்