மன்னார் மாவட்டத்தில் 2ஆம் கட்டமாக முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை செயல் திட்டம் மற்றும் கனிய மணல் அகழ்வுகளுக்கு எதிராக நேற்று புதன்கிழமை மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புகளை தெரிவித்திருந்தனர்.
எனினும், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவினால் எவ்வித அனுமதியும் வழங்கப்படாமல் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு எதிராக மக்களே நடவடிக்கை எடுக்க வேண்டும் என மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது.
மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரனின் நெறிப்படுத்தலில் அபிவிருத்தி குழுவின் தலைவரான இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.
இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன், கே.திலீபன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது பல்வேறு விடயங்கள் குறித்தும் பேசப்பட்டன.
குறிப்பாக, மன்னார்தீவு பகுதியில் 2ஆவது கட்டமாக முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு தொடர்பாக கலந்துரையாடப்பட்டபோது பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு, மீனவர் அமைப்புகள், பொது அமைப்புகளின் ஒன்றியம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
மன்னார் தீவுக்குள் கனிய மணல் அகழ்வு அல்லது ஆராய்ச்சி நடவடிக்கைகள் இனி நடைபெறக்கூடாது என பலமுறை தெரிவிக்கப்பட்ட போதும், அகழ்வு தொடர்பாக அபிவிருத்தி குழு கூட்டத்தில் பேசப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
மேலும், கடந்த அபிவிருத்தி குழு கூட்டத்தின் போது காற்றாலை மின் செயற்றிட்டம் தொடர்பாக , பேசுவதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தபோதும் இதுவரை எவ்வித முயற்சிகளும் முன்னெடுக்கப்படவில்லை என விசனம் தெரிவிக்கப்பட்டது.
மன்னார் தீவில் கனிய மணல் அகழ்வு முன்னெடுக்கப்படக்கூடாது என்பதே அனைவரினதும் கோரிக்கை.
எனினும், கனிய மணல் அகழ்வை முன்னெடுக்கும் நிறுவனத்தை அழைத்து கலந்துரையாடியமையை ஏற்றுக்கொள்ள முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
இந்த விடயத்தை திரும்பத் திரும்ப பேசுவதில் அர்த்தம் இல்லை.
அதற்கான அனுமதியை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு வழங்காத நிலையில், கொழும்பில் அனுமதி வழங்குவதாக இருந்தால் இந்த மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் எதற்கு என்றும் அவ்வாறு கொழும்பில் அனைத்துக்கும் அனுமதி வழங்கினால் இனிமேல் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தை நடத்துவதில் அர்த்தம் இல்லை என்றும் இனிமேல் நடத்த வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், பல்வேறு விடயங்கள் குறித்து அங்கு ஆராயப்பட்டது.
இந்த கூட்டத்தில் திணைக்கள தலைவர்கள், முப்படையினர், பிரதேச செயலாளர்கள், வட மாகாண திணைக்கள அதிகாரிகள் எனப் பலர் பங்கேற்றனர்.