நாடாளுமன்றக் குழுத் தலைவராக செல்வம் அடைக்கலநாதன் தேர்வு செய்யப்பட்டாலும் மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகப் பொதுவெளியில் செயற்பட சாத்தியமே இல்லை என்று புளொட் கட்சியின் தலைவரும் நாடாளு மன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்தார்.
அவர் வழங்கிய விசேட செவ்வியிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் இடம்பெற்ற கேள்வி பதில் வருமாறு:-
கேள்வி :- தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுக்கு வழங்குமாறு கோரி கடிதம் எழுதியுள்ளீர்கள். அப்படி அப் பதவி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதனுக்கு வழங்கப்பட்டால் மீண்டும் நீங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இணைந்து செயல்படுவீர்களா?
பதில்:-நாம் தமிழரசுக் கட்சி போன பின்பு ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டணியாகச் செயற்பட்டாலும் நாடாளுமன்றில் தமிழரசுக் கட்சிக் குழுவாகவே இயங்கினோம். நாங்கள் தமிழரசுக் கட்சியை விட்டு தனியாக இயங்கப் போகின்றோம் என சபாநாயகரிடம் என்றுமே கேட்க வில்லை. ஏனெனில் தமிழ் மக்களின் பலம் பலவீனப்படக் கூடாது என்பதனாலும், 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பது அங்கீகரிக்கப்பட்டதாக இருப்பதனாலும், அதனை இழக்கக் கூடாது எனபதற்காகவுமே அதனை உடைக்கக் கூடாது எனச் செயற்பட்டோம்.
இருந்த போதும் சட்டப்படி உடைந்தும் செயற்பட்டிருக்க முடியும். ஏனெனில் குழுவின் மூன்றில் ஒரு பகுதியினர் தனித்துச் செயற்பட முடிவெடுத்தால் அது அங்கீகரிக்கப்படும். இது அடுத்த தேர்தல் வரை தொடரும்.
கேள்வி:- ஆகவே. தற்போது குழுவின் தலைவர் பதவியைக் கோருவது அடுத்த தேர்தல் வரைக்குமானதா?
பதில்: ஆம். ஏனெனில் அடுத்த தேர்தலின் பின்னர் என்ன இடம்பெறும் என்பது தெரியாது.
கேள்வி:- அடுத்த தேர்தலின் பின்னர் என்ன இடம்பெறும் என்பது தெரியாது என்பது எவ்வாறு போட்டியிடுவீர்கள் என்பதே தெரியாதா?
பதில்: ஆம். ஏனெனில் நாம் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி என்றே போட்டியிடுவோம். அவர்கள் தமிழரசுக் கட்சி எனப் போட்டியிடுவார்கள். மக்கள் எவ்வாறு வாக்களிப்பர் என்பது தெரியாது. அதனால் அதனை அடுத்த தேர்தலின் பின்னர் பார்ப்போம்.
கேள்வி:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர்பதவியை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுக்கு வழங்கினால் கூட்டமைப்பு தொடர்வதற்கான சாத்தியப்பாடுகள் உண்டா?
பதில்:- இல்லை, இது தமிழரசுக் கட்சி யின் நாடாளுமன்றக் குழுத் தலைவ ராகவே அவர் உத்தியோகபூர்வமாக இருப்பார்.
கேள்வி:-அவ்வாறானால் தமிழரசுக் கட்சியிலேயே இல்லாத வேறு கட்சித் தலைவர் தமிழரசுக் கட்சிக் குழுவின் தலைவராகச் செயற்படுவதில் நெருக்கடி காணப்படாதா?
பதில்:- அதனால்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எனக் கடிதம் எழுதியுள்ளேன். ஏனெனில் நாம் கூட்டமைப்பு என்றே போட்டியிட்டோம். உத்தியோகபூர் வமாக தமிழரசுக் கட்சியின் சின்னத்திலேயே போட்டியிட்டோம். அதனாலேயே இரு பெயரையும் பயன்படுத்தியுள்ளேன்.
கேள்வி:- குழுத் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தேர்வு செய்யப்படுவதில் இருந்து கூட்டமைப்பு மீண்டும் பொது வெளியில் செயற்படுமா?.
பதில்:-இல்லை.