மறைந்த ஊடகவியலாளர் அஸ்வின் சுதர்சனின் நினைவேந்தல் நிகழ்வும், தேசிய பற்றாளர் விராஜ் மென்டிஸின் அஞ்சலி நிகழ்வும் இன்று நடைபெற்றது.
மறைந்த ஊடகவியலாளரும், கேலிச்சித்திர கலைஞருமான அஸ்வின் சுதர்சனின் நினைவேந்தல் நிகழ்வும், தேசிய பற்றாளர் விராஜ் மென்டிஸின் அஞ்சலி நிகழ்வும் இன்று யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்றது.
யாழ். ஊடக அமையத்தில், அமையத்தின் தலைவர் கு.செல்வக்குமாரின் தலைமையில், பிற்பகல் மாலை 4 மணியளவில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
அஸ்வினின் திருவுருவ படத்திற்கு அஸ்வினின் பெற்றோர் மலர்மாலை அணிவித்தனர். அதனைத் தொடர்ந்து தேசிய பற்றாளர் விராஜ் மென்டீஸின் திருவுருவ படத்திற்கு, யாழ் பல்கலைகழ கலைப்பீடாதிபதி கலாநிதி ரகுராமும், ஊடக கற்கைகள் துறை தலைவர் பூங்குழலி ஆகியோர் மலர்மாலை அணிவித்தனர்.
தொடர்ந்து அஸ்வின் மற்றும் தேசிய பற்றாளர் விராஜ் மென்டிஸ் ஆகியோரின் நினைவுரைகளை பேராசிரியர் கலாநிதி ரகுராம், யாழ்.ஊடக அமையத்தின் ஸ்தாபகரும் மூத்த ஊடகவியலாளருமான ரட்ணம் தயாபரன் ஆற்றினர்.
அஸ்வினின் குடும்பத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஊடக கற்கைநெறியை தொடரும் மாணவர்களில் தெரிவு செய்யப்பட்ட தேவையுடைய மாணவருக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
நன்றி உரையை ஊடகவியலாளரும் யாழ்.ஊடக அமையத்தின் உப தலைவருமான மயூரப்பிரியன் ஆற்றினார்.