இலங்கை கடற்படையினர் தாக்குதல், இந்திய மீனவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரம்.--பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவு
எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களைக் கைது செய்ய முயன்றபோது, கடற்படையினர் மீது தாக்குதல் நடாத்தினர்.
கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக இந்திய மீனவர்கள் 12 பேருக்கு எதிராகவும் குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்யுமாறு பருத்தித்துறை நீதிமன்ற நீதிபதி கிரிசாந்தன் பொன்னுத்துரை, பருத்தித்துறை பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
கடந்த வருடம் நவம்பர் மாதம் 11ஆம் திகதி,பருத்தித்துறைக் கடற்பரப்பில், எல்லை தாண்டி மீன்பிடித்துக் கொண்டிருந்த 12 மீனவர்கள் கடற் படையினரால் கைது செய்யப்பட்டு, பருத்தித்துறை நீரியல்வளத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
கைதான மீனவர்கள் நவம்பர் 13ஆம் திகதி பருத்தித்துறை நீதிமன்றில் நீரியல் வளத்துறை அதிகாரிகளினால் முற்படுத்தப்பட்டு, நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
கைது நடவடிக்கையின்போது, கடற்படை அதிகாரிகளைத் தாக்கி கடமைகளுக்கு இடையூறு விளை வித்தமை மற்றும் படகிற்கு சேதம் ஏற்படுத்தியிருந்தமை தொடர்பில் கடற்படையினரால், பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில், பிறிதொரு முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டது.
எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நீரியல்வளத் திணைக்களத்தினரால் தொடரப்பட்ட வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட இந்திய மீனவர்கள், கடந்த நவம்பர் 27ஆம் திகதி 12 இந்திய மீனவர்களும் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.
ஆனாலும் கடற்படையினரைத் தாக்கியமை தொடர்பில் பருத்தித்துறை பொலிஸாரால் தொடரப்பட்ட பிறிதொரு வழக்கில் மீனவர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
குறித்த வழக்கு நேற்று முன்தினம் பருத்தித்துறை நீதிமன்றில் நீதவான் கிரிசாந்தன் பொன்னுத்துரை முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் போது மீனவர்கள் தமது குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.
ஆகவே இந்திய மீனவர்கள் மீதான குற்றப் பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு நீதவான் பருத்தித்துறை பொலிஸாருக்கு உத்தரவிட்டதுடன் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீனவர்களை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.