மன்னார் போக்குவரத்துப் பிரிவு பொலிஸ் சார்ஜண்ட் மலலசேகர (41308)வின் துரித நடவடிக்கையின் காரணமாக நேற்று ஞாயிற் றுக்கிழமை மன்னார் பிரதான பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண் ஒருவர் காப்பாற்றப்பட்டார் எனத் தெரியவருகிறது.
நேற்றுக் காலை மன்னார் நகருக்குள் நுழையும் பிரதான பாலத்திற்கு அருகில் உள்ள அலுவலகத்தில் பிரதேச போக்குவரத்து பிரிவுக்குப் பொறுப்பான பொலிஸ் சார்ஜண்ட் மலலசேகர பணியில் இருந்த போது யுவதி ஒருவர் கையில் கடிதம் போன்ற ஒன்றை எடுத்துக் கொண்டு வந்துள்ளார்.
பின்னர் அந்த யுவதி அந்தப் பொலிஸ் அதிகாரியிடம் தமிழ் தெரியுமா எனக் கேட்டுள்ளார். அதற்கு சார்ஜண்ட் நீங்கள் யார் என்று தமிழில் கேட்க, அந்தப் பெண் தன் கையில் இருந்த கடிதம் மற்றும் கையடக்கத் தொலைபேசியை பொலிஸ் சார்ஜண்டின் மேசையில் வைத்துவிட்டு மன்னார் பாலம் நோக்கி ஓடியுள்ளார்.
சம்பவத்தை அவதானித்த பொலிஸ் சார்ஜண்ட் மலலசேகர அந்தப் பெண் தற்கொலை செய்து கொள்ளப் போகின்றார் எனச் சந்தேகித்து அவரைத் துரத்திச் சென்றுள்ளார்.
அப்போது அந்தப் பெண் பாலத்தின் பாதுகாப்புச் சுவரில் ஏறிக் கடலில் குதிக்கத் தயாராகியுள்ளார்.
அந்தப் பெண் பாலத்தில் இருந்து குதிக்கப் போனபோது மலலசேகர அந்தப் பெண்ணின் காலைப் பிடித்து அவரைக் காப்பாற்றினார்.
மீட்கப்பட்ட 24 வயதுடைய பெண் மன்னார் பொலிஸ் மகளிர் மற்றும் சிறுவர் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.