ஆசிரியர் நியமனம் பெற்ற ஒருவரின் நியமனம் மீள பெறப்பட்டுள்ளது - வடமாகாண கல்வி அதிகாரிகள் அசண்டையீனம்

7 months ago

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கையால் நியமனம் பெற்றுக்கொண்ட ஆசிரியை ஒருவரின் நியமனம் மீள பெறப்பட்டுள்ள நிலையில் வடமாகாண கல்வி அதிகாரிகளின் அசண்டையீனமே இதற்கு முழுமையான காரணம் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, அண்மையில் ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயத்தின்போது சுமார் 400க்கும் மேற்பட்ட பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதி வழங்கியிருந்தார்.

அதில் கிளிநொச்சியைச் சேர்ந்த பட்டதாரி ஒருவருக்கும் நியமனக் கடிதம் வழங்கப்பட்ட நிலையில், தவறுதலாக அந்த நியமனம் வழங்கப்பட்டதாக கூறிய மாகாண கல்வி அமைச்சு, அவருக்கு வழங்கப்பட்ட நியமனத்தை மீள பெற்றிருக்கின்றது.

நியமனம் பெறுவதற்கு தகுதிபெற்ற பட்டதாரிகள் பெற்றிருந்த புள்ளிகள் வெளியிடப்படாமல் பெயர்பட்டியல் மட்டுமே வெளியிடப்பட்டது.

அந்த பட்டியலில் மேற்படி பட்டதாரியின் பெயரும் இடம்பெற்றிருந்த நிலையில், அவர் ஜனாதிபதியிடமிருந்து நியமன கடிதத்தைப் பெற்றுள்ளார்.

இதனையடுத்து தவறுதலாக நியமனம் வழங்கப்பட்டுவிட்டதாக கூறிய வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் வழங்கப்பட்ட நியமனத்தை மீளப் பெற்றுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் நியமனத்திற்கு தகுதிபெற்ற பட்டதாரிகள் பெற்றிருந்த புள்ளிகள் மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவால் வெளியிடப்பட்டு அதன் பின்பே நியமனம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றிருந்த நிலையில் வடக்கு கல்வி அதிகாரிகளின் அசண்டையீனத்தால் பட்டதாரி பெண் ஒருவர்  மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக    கூறப்படுகின்றது.