டி20 உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய கிரிக்கெட் அணி இன்று தாயகம் திரும்பியது. இந்தியா வந்ததும் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த இந்திய வீரர்கள் மும்பையில் வெற்றிப் பேரணி நடத்துகின்றனர்.
அதைத் தொடர்ந்து மும்பை வான்கடே மைதானத்தில் வீரர்களுக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது. இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர்களை வரவேற்க மும்பையின் மரைன் ட்ரைவ் பகுதி மற்றும் வான்கடே மைதானத்தில் பெருமளவிலான ரசிகர்கள் மழையையும் பொருட்படுத்தாது திரண்டுள்ளனர்.
டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி பார்படாஸில் இருந்து இந்தியா வந்தடைந்திருக்கிறது. 16 மணி நேர விமானப் பயணத்துக்குப் பிறகு இந்திய அணி நாடு திரும்பியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோதியை அவரது இல்லத்தில் இந்திய அணியினர் சந்தித்தனர்.
பெரில் புயல் காரணமாக அணி பார்படாஸில் இருந்து புறப்பட முடியாமல் சிக்கியிருந்தது. புயல் காரணமாக பார்படாஸ் விமான நிலையம் மூடப்பட்டிருந்தது.
இதையடுத்து சிறப்பு விமானம் மூலம் இந்தியக் குழுவினர் டெல்லி வந்தடைந்தனர்.
டெல்லி விமான நிலையத்தை வந்தடைந்தவுடன் வீரர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர்களை வரவேற்க விமான நிலையத்தில் ரசிகர்கள் ஏற்கனவே குவிந்திருந்தனர்.
விமான நிலையத்திலிருந்து டெல்லியின் ஐடிசி மவுரியா ஹோட்டலுக்கு குழு சென்றடைந்தது. பின்னர் இந்திய அணியினர் பிரதமர் நரேந்திர மோதியை அவரது இல்லத்தில் சந்தித்து கோப்பையைக் காண்பித்து மகிழ்ந்தனர்.
ஜூன் 4ஆம் தேதி மாலை 5 மணி முதல் மும்பையில் உள்ள மரைன் டிரைவ் சாலை வழியாக வான்கடே மைதானம் வரை கோப்பையுடன் பேரணி நடக்கும் என்று கேப்டன் ரோகித் சர்மா குறிப்பிட்டுள்ளார்.
"இந்த சிறப்பான தருணத்தை உங்கள் அனைவருடனும் கொண்டாட விரும்புகிறோம். எனவே இந்த வெற்றியை வெற்றிப் பேரணியுடன் கொண்டாடுவோம். ஜூலை 4 ஆம் தேதி மாலை 5 மணிக்கு மரைன் டிரைவ் மற்றும் வான்கடே மைதானத்தில்" என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜூன் 29 அன்று, பார்படாஸில் நடந்த டி20 இறுதிப் போட்டியில் இந்தியா ஏழு ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது. ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி 17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது.