ஊடகவியலாளர் லசந்த மற்றும் வசீம் தாஜுதீன் ஆகியோரின் கொலையுடன் தொடர்பு என கருதப்பட்டவர்கள் விடுதலை.
ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க மற்றும் ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் ஆகியோரின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் முழுமையாக குற்றங்களில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் தலைவர் ரவி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
லசந்த விக்கிரமதுங்க மற்றும் தாஜுதீன் இருவரும் அரசியல் காரணங்களுக்காகவே படுகொலை செய்யப்பட்டதாக, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு ஆதரவாக குருநாகலில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போது ரவி செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், தாஜுடீன் கொலை தொடர்பான விசாரணைகள் அப்போதைய அரசாங்கத்தால் தடுக்கப்பட்டதாக செனவிரத்ன இதன்போது கூறினார்.
குறித்த கொலையை முறையாக விசாரிக்க பொலிஸார் அனுமதிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
தி சண்டே லீடரின் நிறுவனர் விக்கிரமதுங்க, மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தவர், அப்போது பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்சவுடன் அவர் சட்டப் போரில் ஈடுபட்டிருந்தார்.
இந்தநிலையில், கோட்டாபய ராஜபக்சவின் ஆயுதக் கொடுக்கல் வாங்கல் ஊழல்கள் தொடர்பில், நீதிவான் முன்னிலையில் சாட்சியமளிப்பதற்குச் சில நாட்களுக்கு முன்னதாக 2009 ஜனவரி 8 ஆம் திகதி லசந்த விக்ரமதுங்க சுட்டுக் கொல்லப்பட்டார்.
முஹம்மது வாசிம் தாஜுதீன் 2012 மே 17 ஆம் திகதியன்று கார் விபத்தில் கொல்லப்பட்டார், இது முதலில் விபத்து என்று கூறப்பட்டது, ஆனால் பின்னர் அது கொலையாக விசாரிக்கப்பட்டது என்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் தலைவர் ரவி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.