கிழக்கில் தமிழ்த் தேசியத்தைக் கொண்ட கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும். கிழக்கு பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள்
கிழக்கில் தமிழர்கள் தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினையை கருத்தில் கொண்டு தமிழ் தேசியத்தைக் கொண்டு செயற்படும் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என கிழக்கு பல்கலைக் கழகத்தின் கலை கலாசார பீட மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இன்று தமிழர்களின் வாக்குகளைப் பிரிப்பதற்கு பலர் களமிறக்கப்பட்டுள்ள நிலையில் தமிழர்கள் சிந்தித்து தமது வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் எனவும் அது கோரிக்கை விடுத்துள்ளது.
மட்டு ஊடக அமையத்தில் நடைபெற்ற சந்திப்பிலேயே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த கிழக்கு பல்கலைக்கழக கலைகலாசார பீடத்தின் மாணவர் ஒன்றிய தலைவர் விக்னேஸ்வரன் கஜரூபன்-
எதிர்வரும் பொதுத் தேர்தலானது வடக்கு-கிழக்கு தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஒரு சவால்மிக்க தேர்தலாக காணப்படுகின்றது.
இன்று வடக்கு கிழக்கில் தமிழ் தேசிய கட்சிகள் பலவாக பிளவுபட்டு நிற்கின்றன.
அதேபோன்று பல சுயேச்சைக் குழுக்களும் களமிறக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் மக்கள் குழப்ப நிலையிலிருக்கும் இந்த சூழலில் தமிழ் மக்கள் அணியாக திரண்டு தமிழ் மக்கள் தமிழ் தேசியம் சார்ந்துசெயல்படும் கட்சிகளை ஆதரிக்க வேண்டும்.
இந்த நிலையில் கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசிய அரசியல் மிகவும் சவாலானதாக மாறியுள்ளது.
இன்று அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் இல்லாமல்போகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை உணர்ந்து இப்பகுதியிலும் தமிழர்களின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுடன் தமிழ் தேசியம் சார்ந்து செயற்படும் அரசியல் கட்சிகளுக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் ஆதரவு என்றும் இருக்கும்.
பாராளுமன்ற தேர்தலையும் ஜனாதிபதி தேர்தலையும் வட கிழக்கில் இருக்கின்ற தமிழ் இளைஞர்கள் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும்.
ஜனாதிபதியாக பெரும்பான்மை இனத்தவர் ஒருவரே சூழ்நிலை இந்த நாட்டில் உள்ளது.
தமிழர்கள் இந்த நாட்டில் ஜனாதிபதியாக வரக் கூடிய சூழல் இருக்காது.
இன்று வடக்கு கிழக்கில் தமிழ் இளைஞர்கள் மத்தியில் தேசிய மக்கள் சக்தி என்ற கோசம் எழுந்துள்ளதை காண முடிகின்றது.
தேசிய மக்கள் சக்தியின் வரலாறை கற்க வேண்டிய சூழ்நிலையில் நாங்கள் அனைவரும் இருக்கின்றோம்.
பாராளுமன்ற தேர்தலானது எமது இனத்தின் அடையாளத்தையும் இனத்தின் சுயநிர்ணய உரிமையையும் பாராளுமன்றத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் -என்றார்.