கடத்தலில் ஈடுபடும் எம்.பிக்களின் பதவிகளை பறிக்க புதிய சட்டம் வேண்டும்- எம்.பி- எம். எஸ். உதுமாலெப்பை, சபாநாயகரிடம் கோரிக்கை

1 month ago



நமது நாட்டுக்கும் பாராளுமன்றத்துக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தி கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிகளை பறிக்கக் கூடிய வகையில் புதிய சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்"- இவ்வாறு அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ். உதுமாலெப்பை, சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பத்தாவது பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட புதிய உறுப்பினர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட திசைமுகப்படுத்தல் செயலமர்வு பாராளுமன்றத்தில் சபாநாயகர் அசோக ரன்வல தலைமையில் நடைபெற்றது.

இதன்போதே, சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் உது மாலெப்பை மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

"மக்களின் ஆணையைப் பெற்று பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களில் சிலர் நமது நாட்டுக்கும், பாராளுமன்றத்துக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தி கடத்தல் செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறான பாராளுமன்ற உறுப்பினர்களை பதவியில் இருந்து நீக்குவதற்கான புதிய சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அதனை சட்டமாக்க சபாநாயகர் ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

பாராளுமன்றத்தில் சட்ட மூலம் கொண்டு வந்து கடத்தலில் ஈடுபடும் பாராளுமன்ற உறுப்பினர்களை பதவிலிருந்து நீக்க முடியாத நிலைமை ஏற்படுமாயின், ஜனாதிபதியின் விசேட அதிகாரத்தைப் பயன்படுத்தி கடத்தலில் ஈடுபடும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு ஜனாதிபதி விசேட குழு ஒன்றை நியமிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.