மாவீரர் நாள் தற்போது வியாபாரம் ஆகி அரசியல்வாதிகளுக்கு தீனி ஆகிவிட்டது.-- முன்னாள் போராளி குலசிங்கம் நவகுமார் (பாலன்) தெரிவித்தார்.
மாவீரர் நாள் தற்போது வியாபாரம் ஆகி அரசியல்வாதிகளுக்கு தீனி ஆகிவிட்டது.
அரசியல்வாதிகள் தமது அரசியலைப் பார்க்க வேண்டுமே தவிர மாவீரர்களின் தியாகங்களை வைத்து அரசியல் செய்ய முற்படக்கூடாது.
அதனை திறமையாக மாவீரர்களின் பெற்றோர்கள் செய்வார்கள் என முன்னாள் போராளி குலசிங்கம் நவகுமார் (பாலன்) தெரிவித்தார்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.
முன்னாள் போராளி கருத்து தெரிவிக்கையில்,
2009 யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இதுவரை நான் எனது வீட்டிலேயே மாவீரர் நாளை நான் அனுஷ்டித்துள்ளேன்.
இதனை யாரும் தடுக்க முடியாது. மாவீரர் நாள் தற்போது வியாபாரம் ஆகிவிட்டது. அரசியல்வாதிகளுக்கு தீனி ஆகிவிட்டது.
எமக்கு முன்னதாக ஒரு அரசியல் முன்னெடுக்கப்பட்டது. அதில் தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்காத நிலையில் நாம் வலிந்து ஆயுத போராட்டத்தை மேற்கொண்டு நிழல் அரசாங்கத்தை அமைத்தோம்.
அந்தத் தலைமை போர்க்களத்துக்கு மாவீரர்களை அனுப்பிய பெற்றோர்களை கௌரவித்தது.
அது தகுதியானதோர் கௌரவிப்பு.
அது மாவீரர்களின் பெற்றோர்களுக்கு ஒரு விமோசனத்தை அளித்ததாக நான் நினைக்கின்றேன்.
இன்று மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிப்பு செய்யும் அரசியல்வாதிகள் எந்த காலகட்டத்திலும் போர்களத்தில் நின்றவர்கள் அல்ல.
அவர்கள் தங்கள் பிள்ளைகளை போர்க்களத்துக்கு அனுப்பியவர்களும் அல்ல.
அவர்கள் குடும்பத்தில் யாரும் காணாமல் ஆக்கப்படவில்லை.
அரசியல்வாதிகள் தங்கள் அரசியல் நலன்களுக்காக மாவீரர்களின் தியாகங்களையும் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
முன்னாள் போராளி என்ற வகையில் இதனை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்
நான் மாவீரர்கள் பெற்றோர்களிடம் அன்பாக கூறுவது என்னவென்றால் தற்போது உங்களைத் தேடி அரசியல்வாதிகள் வருவதாக அறிகின்றேன்.
இவருக்கு வாக்களியுங்கள், அவருக்கு வாக்களியுங்கள், இவர் வந்தால் தான் மாவீரர் நாளுக்கு விளக்கேற்ற முடியும் என்ற கதைகளை கூறி பாராளுமன்ற உறுப்பினராவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர்.
இதற்கு மாவீரர்களின் பெற்றோர் நல்ல தக்க பதிலை வழங்க வேண்டும். மாவீரர்கள் பெற்றோருக்கு மாவீரர் துயிலுமில்லங்களுக்கு சென்று அஞ்சலிப்பதற்கு முடியும். அதனை யாரும் தடுக்க முடியாது.
எந்த வரவு செலவுத் திட்ட நிதியை பயன்படுத்தி நீங்கள் துயிலுமில்லங்களை கட்டப் போகின்றீர்கள்.
புலம்பெயர் உறவுகள் பணம் தருவார்கள் என்றால் அதற்கான அனுமதியை பெற முடியுமா?
பெரும்பாலான துயிலும் இல்லங்கள் உள்ளூராட்சி சபைகளின் கட்டுப்பாட்டிலேயே காணப்படுகிறது.
அதற்கு பொறுப்பாக உள்ள பிரதேச சபை செயலாளர்கள் ஒத்துழைப்பார்களா?
சில சமயங்களில் மாவீரர் தூயிலும் இல்லங்களில் அரசியல்வாதிகள் சண்டை பிடிக்கின்றனர்.
மாவீரர்களின் பெற்றோர்களிடம் நாம் கண்ணியமாக வேண்டுவது உங்கள் பிள்ளைகளின் தியாகங்களையும் உணர்வுகளையும் வித்துப்பிழைக்கின்ற வகையில் செயல்படாதீர்கள்.
நான் 20 வருடங்கள் போர்க்களத்தில் நின்ற போராளி. இதனை சொல்வதற்கு எனக்கு தகுதி இருக்கு நான் நம்புகிறேன்.
மாவீரர் நாள் ஏற்பாட்டுக் குழுவில் அரசியல்வாதிகள் இருப்பதை தவிர்த்து மாவீரர்களின் பெற்றோர்களை அதில் போடவேண்டும்.
அரசியல்வாதிகள் தமது சமகால அரசியலைப் பார்க்க வேண்டும்.
மாவீரர்களின் தியாகங்களை வைத்து அரசியல் செய்ய முற்படக்கூடாது.
அதனை திறமையாக மாவீரர்களின் பெற்றோர்கள் செய்வார்கள் என தான் நம்புகிறேன் - என்றார்.
தமிழ் தேசத்துக்காக மூன்று மாவீரர்களை வித்தாக்கிய சிங்கள தாய் சீலாவதி நடராசாவும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தார்.
தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகள் வீட்டுக்கு வந்து தமக்கு வாக்களியுங்கள் என்பார்கள்.அதற்கு பின்னர் எவரும் திரும்பி பார்க்கமாட்டார்கள்.
இந்த மண்ணுக்காக மூன்று மாவீரர்களை கொடுத்தேன். நான் தற்போது மிகவும் வறுமையில் உடல் நலிவுற்று இயலாமல் இருக்கின்றேன்.
ஆனால் அரசியல்வாதிகள் எமக்கு உதவி செய்யத் தேவையில்லை. மாவீரர்களின் பெயர்களை சொல்லி அரசியல்வாதிகள் குளிர்காய வேண்டாம்.
மாவீரர் துயிலும் இல்லங்கள் காடாகி உள்ளது. மாவீரர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களையே இணைத்து மாவீரர் நாள் ஏற்பாட்டுக் குழுவை உருவாக்க வேண்டும்.
நான் சிங்கள பெண்ணாக இருந்தாலும் இந்த மண்ணிலேயே சாவேன்.
அதுவரை நிம்மதியாக எமது பிள்ளைகளுக்கு விளக்கேற்றவிடுங்கள். மாவீரர்களின் பெயரைச் சொல்லி எல்லாம் செய்வோம் எல்லாம் செய்வோம் என அரசியல்வாதிகள் எவரும் வரக்கூடாது - என்றார்.