அமெரிக்காவின் லொஸ் ஏஞ்ச லிஸில் பரவிவரும் காட்டுத் தீயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்தது
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்ச லிஸில் பரவிவரும் காட்டுத் தீயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மணித்தியாலத்துக்கு சுமார் 96 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசுவதால், தற்போதைய காட்டுத் தீப்பரவல் நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் பரவக்கூடிய அபாயம் உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
காட்டுத்தீப்பரவல் காரணமாக பெலிசேட்ஸ் பகுதியில் 23,000 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு அழிவடைந்துள்ளதுடன், ஈடன் பகுதியில் 14,000 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் காட்டுத்தீ காரணமாக அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க தீயணைப்பு குழுக்கள், காட்டுத்தீ பரவுவதைத் தடுப்பதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஒரு வாரமாகியும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
இது குறித்து லொஸ் ஏஞ்சல்ஸ் அதிகாரிகள் வட்டாரங்கள் கூறுகையில்,
"லொஸ் ஏஞ்சல்ஸ் நகரம் மலை சார்ந்த பகுதியாகும். இந்த மலைப் பகுதிகளில் வீடுகள் இல்லாத நாடோடிகள் பலர் வசிக்கின்றனர்.
தற்போது குளிர்காலம் என்பதால் அவர்களில் யாராவது வெப்பத்துக்காக தீமூட்டி இருக்கலாம்.
அந்த தீ காட்டுத் தீயாக பரவியிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.
லொஸ் ஏஞ்சல்ஸ் வனப் பகுதியில் உயர் கோபுரங்கள் மூலமும் உயர்அழுத்த மின்சார கம்பிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இதில் மின் கசிவு ஏற்பட்டு காட்டுத் தீயாக உருவாகி இருக்கலாம் என்றும் சந்தேகிக்கிறோம்.
கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் போதிய மழைப்பொழிவு இல்லை.
இதனால் பைன் மரங்கள், செடி, கொடிகள் பட்டுப் போயிருந்தன.
இது காட்டுத் தீ அதிவேகமாக பரவியதற்கு முக்கிய காரணம் ஆகும்.
சுமார் 200 மைல் தொலைவில் கிரேட் பேசின் பாலைவனம் அமைந்துள்ளது.
அங்கிருந்து வரும் வறண்ட காற்று தற்போது லொஸ் ஏஞ்சல்ஸ் நகரை கடந்து செல்கிறது.
இந்த காற்று வழக்கத்தைவிட அதிவேகமாக சுமார் 80 கி.மீ. வேகத்தில் வீசுகிறது.
இதுவும் காட்டுத் தீ வியாபித்து பரவியதற்கு முக்கிய காரணமாகும்.
காட்டுத் தீயை அணைக்க கனடா, மெக்சிகோ நாடுகள் உதவிக் கரம் நீட்டி உள்ளன.
அமெரிக்க அரசின் ஒட்டுமொத்த கவனமும் லாஸ் ஏஞ்சல்ஸ் மீது திரும்பியிருக்கிறது.
இதன் காரணமாக தீயை கட்டுப்படுத்துவதில் ஓரளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது.
திடீர் மழை பெய்ய வேண்டும். காற்றின் வேகம் குறைய வேண்டும். அப்போதுதான் தீயை கட்டுப்படுத்த முடியும்.
இப்போதைய நிலையில் காற்றின் வேகம் குறைய வாய்ப்பில்லை என்று வானிலை மையம் கூறியிருக்கிறது.
இயற்கை ஒத்துழைப்பு அளித்தால் தீயை விரைவாக அணைப்போம்." என்று அதிகாரிகள் மற்றும் தீயணைப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.