நகர அபிவிருத்திச் சபையின் தீர்மானத்தின் பிரகாரம் வடக்கில் 200 படவரைநர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு
நகர அபிவிருத்திச் சபையின் தீர்மானத்தின் பிரகாரம் வடக்கு மாகாணத்திலுள்ள 200 படவரைநர்களின் வாழ்வாதாரம் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது.
எனவே நகர அபிவிருத்திச்சபை தனது தீர்மானத்தை கரிசனையுடன் மாற்றியமைக்க வேண்டும் என்று யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று முன்தினம் (14) இடம்பெற்ற போது கட்டட நிர்மாணம், கடந்தகால நிதி செலவினங்கள், மாகாணசபை நிதி ஒதுக்கீடுகள் தொடர்பில் ஆராயப்பட்டன.
அதன்போது வடக்கு மாகாண சபையின் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரணவனாதன் குறிப்பிடுகையில்,
வடக்கில் 200 பட வரைஞர்களே காணப்படுகின்றார்கள். அவர்கள் மூலமே கட்டடங்கள் புனர் நிர்மானங்கள் தொடர்பிலான படங்கள் வரையப்படுகின்றன.
ஏற்கனவே நகர அபிவிருத்திச் சபையின் அறிவுறுத்தல்களின் பிரகாரம் படவரைஞர்கள் தொழிற் தகைமை சான்றிதழ் -4 (NVQ5)கொண்டிருக்க வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நகர அபிவிருத்திச் சபை மீளவும் சட்டங்களை மாற்றி எதிர்வரும் ஜனவரி மாதம் முதல்
படவரைஞர்கள் (NVQ5) தகைமையைக் கொண்டிருக்க வேண்டும் என அறிவித்துள்ளது.
அதனையடுத்து 200 படவரைஞர்களும் தற்சமயம் குறித்த கற்கை நெறியை தொடர்ந்து வருகின்றனர்.
எனினும் குறித்த கற்கைநெறியை நிறைவு செய்ய சுமார் 2 வருடங்கள் தேவைப்படுகின்றன.
அத்துடன் இவ்வாறு சட்டம் வடக்கில் நடைமுறைப்படுத்தப்பட்டால் திணைக்கள ரீதியாகப் பணிகள் முன்னெடுப்பது சவாலாக அமையும்.
இதனால் வடக்கு படவரைஞர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும்.
இதனைக் கருத்திற்கொண்டு ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
அதற்கு கருத்துத் தெரிவித்த ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் சம்பந்தப்பட்ட சபையுடன் பேசித் தீர்மானம் எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.