இராணுவத்திடம் சரணடைந்த புலி உறுப்பினர்களின் பட்டியலை இலங்கை அரசிடம் இருந்து பெற்றுத் தருமாறு ஐ.நாவிடம் நாடு கடந்த தமிழீழ பிரதமர் உருத்திரகுமாரன் கோரிக்கை

இறுதிப் போரின்போது இராணுவத்திடம் சரணடைந்த புலி உறுப்பினர்களின் பட்டியலை இலங்கை அரசாங்கத்திடமிருந்து பெற்றுத் தருமாறு ஐ.நா. செயற்குழுவிடம் நாடு கடந்த தமிழீழ பிரதமர் உருத்திரகுமாரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ஐ.நா.செயற்குழுவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அருட்தந்தை ஒருவர் உட்பட இராணுவத்திடம் சரணடைந்த புலி உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு என்ன நடந்தது? என்பது இதுவரை தெரியாது என சர்வதேச மன்னிப்புச்சபைச் செயலாளர் நாயகம் அக்னஸ் கால்மார்ட் தெரிவித்துள்ளார்.
குடும்பமாக சரணடைந்த விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் குடும்பமாகக் காணாமலாக்கப்பட்டுள்ளனர்.
நான்கு மாத, பத்து மாத குழந்தைகளின் படங்களைக்கூட நான் பார்த்துள்ளேன்.
இந்தக் குழந்தைகளுக்கு என்ன நடந்தது என்று கேட்க வேண்டிய தேவை இலங்கையர்களுக்கு உள்ளது.
தனிநபர்கள் மட்டுமன்றி சுயநிர்ணயத்திற்காக குரல் கொடுத்தவர்களும் காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றனர்.
இனப்படுகொலை காரணமாகக் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் உளரீதியான தாக்கங்களுக்கு உட்பட்டிருப்பதாக பொஸ்னிய படுகொலை தொடர்பில் சர்வதேச நீதிமன்றில் வாதாடிய பிலிப் சாண்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டுச் சட்டங்களின் கீழ் விசாரணைகளை முன்னெடுக்கப்போவதாக இலங்கை அரசாங்கம் கூறுகிறது.
ஆனால் ஐ.நா. சாசனத்தின் 31ஆவது பிரிவின் கீழ் பாதிக்கப்பட்டவர்கள் ஐ.நா. விசாரணையைக் கோருவதற்கு அவர்களுக்கு உரிமையுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவோ நீதியின் முன்நிறுத்தப்படவோ இல்லை.
காரணம் இலங்கை இனவாத அரசியலில் மூழ்கியுள்ளது.
இதுவரை காலமும் அர்த்தமுள்ள நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்பதையே இது காட்டுகிறது.
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்துள்ளது.
ஆனால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார் பெப்ரவரி 4ம் திகதி நடைபெறவுள்ள இலங்கையின் சுதந்திரதினத்தை கரிநாளாகப் பிரகடனம் செய்துள்ளனர் - என்றுள்ளது.
அத்துடன் “இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகள்" என்ற நூலின் பிரதியையும் தனது கடிதத்துடன் உருத்திரகுமார் இணைத்து அனுப்பியுள்ளார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
