உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக இருவர் கைது செய்யப்படவுள்ளதாக கொழும்பு சிங்கள வார ஏடு செய்தி
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக முக்கிய புள்ளிகள் இருவர் விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக கொழும்பு சிங்கள வார ஏடு ஒன்று்செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக நேற்று சனிக்கிழமை வெளியான அந்த வார ஏட்டின் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக புதிதாக தொடங்கப்பட்டுள்ள விசாரணைகளின்படி, முன்னாள் பாதுகாப்புத் தலைவர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர் ஒருவரும் விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக உயர் மட்ட பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரித்தானியாவின் சனல்-4 அலை வரிசை ஊடாக அண்மையில் இது தொடர்பில் வெளிப்படுத்திய ஹன்சீர் ஆசாத் மௌலானா, அது தொடர்பான 'சூம்' தொழில்நுட்பத்தின் ஊடாக மீண்டும் சாட்சியம் அளிப்பதாகவும், நீதிமன்ற உத்தரவின் பேரில் சந்தேக நபர்கள் கைது செய்யப்படவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனல்-4 நிகழ்ச்சி குறித்து, உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.ஐ.ஜனாப் இமாம் தலைமையில் ஆணைக்குழு நியமிக்கப்பட்டு சிறப்பு அறிக்கையும் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், விசாரணைக் குழுவின் முன்பாக சாட்சியமளிக்குமாறு ஆசாத் மௌலானா கோரப்பட்டிருந்ததுடன், தற்போது வெளிநாடு ஒன்றில் உள்ள அவர் விசாரணையில் பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.