எரிமலை வெடித்ததை அடுத்து, இந்தோனேசியாவின் பாலித்தீவுக்கான விமானங்களை இரத்து செய்துள்ளன.

1 month ago



10 கிலோமீற்றர் அல்லது 32,808 அடி உயரத்துக்கு சாம்பல்களை உமிழ்ந்த எரிமலை மேலும் வெடித்ததை அடுத்து, பல சர்வதேச விமான நிறுவனங்கள், இந்தோனேசியாவின் பாலித்தீவுக்கான விமானங்களை இரத்து செய்துள்ளன.

எரிமலை சாம்பல் காரணமாக பாதுகாப்பு காரணங்களுக்காக புதன்கிழமை பாலிக்கு விமானங்களை நிறுத்தியதாக ஜெட்ஸ்டார் மற்றும் குவாண்டாஸ் விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அதே நேரத்தில் விமான கண்காணிப்பு வலைத்தளமான ஃப்ளைட்ராடார், ஏர் ஏசியா மற்றும் விர்ஜின் விமானங்களும் இரத்து செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது.

பாலி இந்தோனேசியாவின் சிறந்த சுற்றுலாப் பகுதி என்பதோடு அவுஸ்திரேலிய பார்வையாளர்களுக்கு அதிகம் பரிச்சயமான இடமாகவும் கருதப்படுகிறது.

பாலியில் இருந்து சுமார் 800 கிலோ மீற்றர் அல்லது 497 மைல் தொலைவில் உள்ள லெவோடோபி லக்கி-லக்கி எரிமலையில் கடந்த 3ஆம் திகதியன்று முதல் வெடிப்பு ஏற்பட்டது.

இதன்போது, குறைந்தது 9 பேர் கொல்லப்பட்டனர். இந்தநிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை, குறித்த எரிமலை பல முறை வெடித்தது.

இதன் காரணமாக, 2024 நவம்பர் 4 முதல் நவம்பர் 12 வரை, சிங்கப்பூர், ஹொங்காங் மற்றும் பல அவுஸ்திரேலிய நகரங்கள் உட்பட்ட பல இடங்களில் இருந்து 80 விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் சுமார் 130 எரிமலைகள் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.