நான்கு நாட்களில் நான்கு பாடசாலைகள் மீது தாக்குதல் நடத்தி அடைக்கலம் தேடிய மக்களை கொன்று குவித்த இஸ்ரேல் இராணுவம், அனைத்து பலஸ்தீன மக்களையும் உடனடியாக காஸா நகரத்தை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது.
நேற்றுக் காலை 9 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் 52 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும், 208 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படும் நிலையில் இஸ்ரேல் இராணுவத்தின் இந்த அறிவிப்பு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கான் யூனிஸில் இடம்பெயர்ந்த மக்கள் வசிக்கும் பாட சாலை மீது இஸ்ரேல் படைகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர்.
காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான மற்றொரு சுற்றுப் பேச்சுகள் நடைபெற்று வரும் நிலையில், புதன்கிழமை இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
அத்தோடு கடந்த வருடம் ஒக்டோபர் 7 ஆம் திகதி முதல் இதுவரையான காலப் பகுதியில் ஹமாஸ் போராளிகளில் 60 சதவீதத்தினர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாது காப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், காஸாவில் கடந்த நான்கு நாட்களில் நான்கு பாடசாலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக காஸா நகரில் உள்ள பலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரணம் மற்றும் பணி முகாமையின் தலைவர் பிலிப்லஸ் ஸாரினி கூறினார். அத்தோடு, உடனடியாக போர் நிறுத்தத்துக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
பாடசாலைகளில் அடைக்கலம் தேடும் மக்கள் கொல்லப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. மேலும், இந்தச் சம்பவம் குறித்து விரைவான விசாரணை தேவை என ஜேர்மனி தெரிவித்துள்ளது.