இந்தியாவின் திருச்சி மத்திய சிறைச்சாலை சிறப்பு முகாமில் இலங்கை ஏதிலிகள், தங்களை விடுவிக்குமாறு போராட்டம்
இந்தியாவின் திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் இலங்கை ஏதிலிகள், தங்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
இந்தப் போராட்டம் நேற்று முன்தினம் காலை ஆரம்பிக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் அமைந்துள்ள ஏதிலிகளுக்கான சிறப்பு முகாமில் இலங்கை உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 110 இற்கும் மேற்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அங்குள்ள இலங்கைத் தமிழர்கள் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்துக்குச் செல்லவோ, வைத்தியசாலைக்குச் செல்லவோ, நீதிமன்றம் மற்றும் தூதரங்கள் தொடர்பான ஆவணங்களில் கையெழுத்திடவோ மாவட்ட நிர்வாகம் தரப்பில் மறுப்பு தெரிவிப்பதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையிலேயே, தங்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதைக் கண்டித்தும், வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு மற்றும் தண்டனைக் காலம் முடிவடைந்த தங்களை விடுவிக்கக் கோரியும் 10 இற்கும் மேற்பட்ட இலங்கை ஏதிலிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களில் சிலர் மரத்தின் மீது ஏறி தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.