தமிழ் எம்.பிக்களில் நாடாளுமன்றில் மருத்துவச் செலவிற்கு உச்சப் பட்சத் தொகையைப் பெற்றுள்ளனர். தகவல் அறியும் சட்டமூலம் அம்பலம்
2020 முதல் 2024 வரையான காலத்தில் தமிழ் எம்.பிக்களில் நாடாளுமன்றில் மருத்துவச் செலவினத்தில் உச்சப் பட்சத் தொகையை சாள்ஸ் நிர்மலநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் கோவிந்தன் கருணாகரன் (ஜெனா) ஆகியோர் பெற்றுள்ளனர்.
2020 முதல் 2024 வரையான நாடாளுமன்ற காலப் பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான மருத்துவக் காப்புறுதி மூலம் எவ்வளவு மருத்துவச் செலவினத்தைப் பெற்றுள்ளனர் என 15 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விவரம் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சிற்கு தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கப்பட்டது.
15 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களில் இராசமாணிக்கம் சாணக்கியன், சிவஞானம் சிறிதரன், அங்கஜன் இராமநாதன், கு.திலீபன் ஆகிய 4 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் 5 வருட காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான மருத்துவக் காப்புறுதியாக எந்தவொரு பணத்தையும் பெற்றுக் கொள்ளவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களில் அதிகூடிய தொகையான 9 லட்சத்து 93 ஆயிரத்து 610 ரூபாவை சாள்ஸ் நிர்மலநாதன் பெற்றிருக்கும் அதேநேரம், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இரண்டாவது இடத்தில் 8 லட்சம் ரூபாவினையும், கோவிந்தன் கருணாகரன் 5 லட்சத்து 91 ஆயிரத்து 275 ரூபாவினையும் பெற்றுள்ளார்.
டக்ளஸ் தேவானந்தா 4 லட்சம் ரூபாவும், எம்.ஏ.சுமந்திரன் 3 லட்சத்து 86 ஆயிரத்து 41 ரூபா, சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) 3 லட்சத்து 62 ஆயிரத்து 355 ரூபா. எஸ்.வியாழேந் திரன் 3 லட்சத்து 30 ஆயிரத்து 555 ரூபா. செல்வராஜா கஜேந்திரன் 2 லட்சத்து 76 ஆயிரத்து 500 ரூபா பெற்றுள்ளனர்.
செல்வம் அடைக்கலநாதன் 2 லட்சத்து 45 ஆயிரத்து 397 ரூபாவும், சி.வி. விக்னேஸ்வரன் 2 லட்சத்து 32 ஆயிரத்து 534 ரூபாவும், த.சித்தார்த்தன் 2 லட்சம் ரூபாவினையும் பெற்றுள்ளனர்.