இந்திய 76 ஆவது குடியரசு தின விழாவில் இந்தியாவின் கலாச்சாரப் பாரம்பரியமும், இராணுவ வலிமையும் காட்சிப்படுத்தப்பட்டன

2 months ago



இந்தியா டில்லியில் உள்ள கடமைப் பாதையில் நேற்று ஞாயிற்றுக் கிழமை நடந்த 76 ஆவது குடியரசு தின விழாவில் இந்தியாவின் கலாச்சாரப் பாரம்பரியமும், இராணுவ வலிமையும் காட்சிப்படுத்தப்பட்டன.

கடமைப் பாதையில் நடந்த விழாவில், மாநிலங்கள் மற்றும் அமைச்சகங்களின் 31 அலங்கார ஊர்திகள், பாதுகாப்புப் படைகளின் பிரம்மிக்க வைக்கும் ஒருங்கிணைந்த அணிவகுப்புகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.

தேசிய தலைநகர் டில்லியில் முற்பகல் 10.30 மணி அளவில் குடியரசு தின விழா தொடங்கியது. இதற்காக கடமைப் பாதைக்கு வந்த குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, சிறப்பு விருந்தினரான இந்தோனேஷிய ஜனாதிபதி பிரபோவோ சுபியாண்டோ ஆகியோரை, பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், முப்படை தளபதிகள், இராணுவ உயரதிகாரிகள் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.

21 குண்டுகள் முழங்க தேசியக் கொடியை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஏற்றினார்.

இதையடுத்து, தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அனைவரும் எழுந்து நின்று தேசியக்கொடிக்கும் தேசிய கீதத்துக்கும் மரியாதை செலுத்தினர்.

அப்போது, 4 இராணுவ ஹெலிக்கொப்டர்கள் மூலம் மலர்கள் தூவப்பட்டன.

இராணுவ அணிவகுப்பு நடத்தப்பட்டது. இராணுவம், கடற்படை, விமானப்படை உட்பட பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த பல்வேறு பிரிவுகள் குழுக்களாக அணிவகுத்து வந்து குடியரசுத் தலைவருக்கு மரியாதை செலுத்தினர்.

இந்தியாவின் இராணுவ வலிமையை பறைசாற்றும் இராணுவ வாகன அணி வகுப்பு நடத்தப்பட்டது.

பல்வேறு நவீன ரக வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தின.

அண்மைய பதிவுகள்