இரணைமடு குள நன்னீர்த் திட்டம் யாழிற்கு கொண்டு வருவதில் சிக்கலால் திட்டம் நடைமுறைப்படுத்தவில்லை - ஆளுநர் தெரிவிப்பு
இரணைமடு நன்னீர்த் திட்டமானது யாழ்ப்பாண மாவட்டத்திற்கு நீரை கொண்டு வருவதற்காகவே திட்டமிடப்பட்டது.
ஆனாலும் செயற்படுத்துவதில் காணப்படும் சிக்கல்கள் காரணமாகத் திட்டம் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை - என்று வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
எந்திரி கலாநிதி சுப்பிரமணியம் சிவகுமார் எழுதிய 'வடக்கு மாகாண நீர் வளங்களும் அவற்றின் பயன்பாட்டு உத்திகளும் பங்கீட்டுக் கொள்கையும்' எனும் இருமொழி நூல் வெளியீட்டு விழா அண்மையில் இடம்பெற்றது.
நிகழ்வில் உரையாற்றும்போதே, வடக்கு ஆளுநர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“கடந்த வருடமும் இரணைமடுக் குளத்தில் இருந்து அதிகளவான நீர் கடலுடன் கலந்துவிட்டதாக அறியமுடிகிறது.
எனவே, இனிவரும் காலங்களில் நீர்வளத் திட்டமிடலில் கவனம் செலுத்த வேண்டிய தேவையுள்ளது.
திட்டங்களால் பாதிப்புகள் ஏற்படாத வகையில் செயற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும்.
வடக்கு மாகாணத்தில் மழை கிடைக்கின்ற காலப் பகுதிகளில் குளங்களில் இருந்து அதிகளவு நீர் வெளியேற்றப்படுகிறது.
இவ்வாறு வெளியேற்றப்படும் நீரைக் குளங்களில் சேமித்து வைக்கச் சரியான பொறிமுறைகள் உருவாக்கப்படுதல் வேண்டும்.
இதற்காகக் குளங்களின் கொள்ளவை அதிகரிக்க வேண்டும்.
உலகின் பல பிரதேசங்களில் நீர்வளம் குறைவாகக் காணப்பட்டாலும் அவை பொருளாதார ரீதியில் முன்னேற்றம் அடைந்துள்ளன.
எமக்கு அனைத்து வளங்களும் இருந்தும் அதனைச் சரியான விதங்களில் கையாளாமல் எமது பிரதேசம் பின்தங்கிக் காணப்படுகின்றது.
எமது பிரதேசங்களில் நீர்வளம் இருந்தும் நாங்கள் உரிய திட்டமிடல் இன்றி முறையாகப் பயன்படுத்தாமல் இருக்கின்றோம்.
நீர்வளத்தின் தரம், அளவு ஆகிய இரண்டும் மிகவும் முக்கியமானவை.
எனவே, எதிர்காலத்தில் எங்களுக்குக் கிடைக்கின்ற நீரை இயன்ற அளவு பயன்படுத்தக் கூடிய வகையில் சேமித்துப் பயன்பெறுவதன் மூலம் உச்சப் பயன்பாட்டைப் பெற்றுக்கொள்ள உரிய செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்” – என்றார் -