கிளிநொச்சியில் 50 ஆண்டு காலமாக வசித்த காணிகளில் இருந்து தமிழ் மக்கள் தெங்கு பயிர்ச் செய்கை சபையால் வெளியேற்றம்
கிளிநொச்சியில் 50 ஆண்டு காலமாக வசித்த காணிகளில் இருந்து தமிழ் மக்கள் தெங்கு பயிர்ச் செய்கை சபையால் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
குறித்த காணிகள் தெங்கு பயிர்ச் செய்கை சபைக்கு சொந்தமானவை என்று கிளிநொச்சி நீதிவான் நீதிமன்று வழங்கிய கட்டளையையடுத்தே அங்கு வசித்தவர்களை வெளியேற்றும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட சோரன்பற்று - கரந்தாய் பகுதியில் சுமார் 160 ஏக்கர் காணி 104 குடும்பங்களுக்குச் சொந்தமாக இருந்தன.
1976 ஆம் ஆண்டு காணி சீர்திருத்த ஆணைக்குழுவால் மூன்று கட்டங்களாக குறித்த காணிகள் மக்களுக்கு பகிர்ந்து வழங்கப்பட்டிருந்தன.
இங்கு வசித்த பலரின் காணி தொடர்பான ஆவணங்கள் போர்க் காலத்தில் அழிவுற்றிருந்தன.
இந்த நிலையில் 2006 ஆம் ஆண்டு சில குடும்பங்களுக்கு மீளவும் ஆவணங்கள் வழங்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் குறித்த காணிகள் தமக்கு சொந்தமானவை என தெரிவித்து தெங்கு பயிர்ச் செய்கை சபை வழக்கு தொடர்ந்திருந்தது.
கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கில் குறித்த காணிகள் தெங்கு பயிர்ச் செய்கை சபைக்கு உரியவை என்று மன்று அண்மையில் தீர்ப்பளித்தது.
குறித்த தீர்ப்புக்கு எதிராக பொதுமக்களால் வவுனியா மேல்நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து, குறித்த காணிகளில் இருந்து அந்தக் குடும்பங்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை தெங்கு பயிர்ச் செய்கை சபை ஆரம்பித்துள்ளது.
எனினும், முன்னதாக கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றால் இதே பகுதியைச் சேர்ந்த சில குடும்பங்களுக்கு காணி உரித்துடையது என்று தீர்ப்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.