அமெரிக்க ஜனாதிபதிகளில் எளிமையின் வடிவமாக வாழ்ந்து மறைந்துள்ளார் ஜிம்மி காட்டர். -அனந்த பாலகிட்ணர்-

18 hours ago



அமெரிக்க ஜனாதிபதிகளில் எளிமையின் வடிவமாக வாழ்ந்து மறைந்துள்ளார் ஜிம்மி காட்டர்.

ஒரு நிலக்கடலை விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவரான ஜம்மி காட்டர் படித்துப் பட்டம் பெற்று அமெரிக்க கடற்படையிலும் ஏழு வருட காலம் ஒரு லெப்டினன்டாக பணியாற்றியிருந்தார்.

அமெரிக்க ஜனாதிபதியாக ஒருவர் தெரிவு செய்யப்படுவதற்கு கல்வித் தகமை மட்டுமல்ல. அமெரிக்க ஆயுதப்படைகளில் பணி புரிந்திருக்க வேண்டியதும் மிக முக்கிய தகமையாக இருக்கின்றது.

எனவே ஜிம்மி காட் டர் அமெரிக்க கடற்படையிலும் ஏழு ஆண்டுகள் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குடும்பத் தொழிலாக நிலக்கடலைச் செய்கையை மேற்கொண்டிருந்தார் ஜிம்மி காட்டர்.

1924ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் முதலாம் திகதி பிறந்த ஜிம்மி காட்டர் 1924 ஆம் ஆண்டு தமது நூறாவது வயதில் கடந்த டிசம்பர் மாதம் 29ஆம் திகதி காலமானார்.

இறக்கும் போது அவருக்கு வயது நூறாகும் (100). அமெரிக்க அதிபர்களில் அதிக காலம் உயிர் வாழ்ந்தவராக ஜிம்மி காட்டர விளங்கினார்.

அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சி சார்பாக அரசியலில் குதித்த ஜிம்மி காட்டர். ஜோர்ஜியா மாநிலத்தின் 76ஆவது ஆளுநராகவும் தெரிவாகியிருந்தார்.

இப் பதவியில் 1971 ஆம் ஆண்டு முதல் 1975ஆம் ஆண்டு வரை அவர் பணியாற்றினார்.

இயல்பாகவே அமைதியான சுபாவமுடையவராகவும் கெடுபிடி யுத்தங்களுக்கு தமது ஆட்சிக் காலத்தில் இடந்தராதவராகவும் ஜிம்மி காட்டர் விளங்கினார்.

ஜிம்மி காட்டர் பெரிதும் மனிதாபிமான நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டினார்.

ஜனநாயகம், சர்வதேச அமைதி, மனித உரிமைகள் போன்றவற்றுக்காக 2002ஆம் ஆண்டு நோபல் சமாதான பரிசையும் ஜிம்மி காட்டர் பெற்றிருந்தார்.

கீர்த்தி மிக்க அமெரிக்க அதிபராக இருந்த ஆபிரகாம் லிங்களின் வாழ்க்கையை பற்றிய நூல் இளமையில் - வறுமையில் துவண்டு பின்னர் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபராக ஆபிரகாம் லிங்கன் குடியேறினார் என்று குறிப்பிடுகின்றது.

'குடிசையிலிருந்து வெள்ளை மாளிகை வரை' என்பதே அந்த நுாலின் தலைப்பாகும்.

ஆனால் ஜிம்மி காட்டர் வெள்ளை மாளிகையில் ஒரு தடவை மாத்திரமே அமெரிக்க அதிபராக பதவி வகித்த பின்னர் 1981ஆம் ஆண்டு பதவி விலகியதும் ஒரு சிறு வீட்டிலேயே குடியேறியிருந்தார்.

அது அவர் முன்பு வகித்த உயரிய அந்தஸ்தை வெளிப்படுத்துவது போல டாம்பீகமானதாக இருக்கவில்லை.

மிகவும் சிறியதான சாதாரண அமெரிக்க குடிமகனொருவர் வாழ்வதைப் போன்ற இல்லத்திலேயே அவர் வாழ்ந்திருந்தார்.

அவ்வீட்டின் பெறுமதி ஒரு லட்சத்து அறுபத்தி ஏழாயிரம் (1,67,000) டொலர்கள் என மதிப்பிடப் பட்டுள்ளது.

அத்துடன் அவருக்கு அமெரிக்க அதிபருக்குரிய வருடாந்த ஓய்வூதியமாக 2,17,000 டொலர்களே இறுதிவரை கிடைத்திருந்தது.

இத் தொகையுடனேயே அவர் சிக்கனமாக தமது மனைவி ரோசலின் காட்டருடன் வாழக்கை நடத்தி வந்திருந்தார்.

அவர் நடமாடித்திருந்த ஓய்வு காலத்தில் சுப்பர் மார்க்கெட் கடைகளுக்குச் சென்று ஏனைய மக்களோடு ஒருவராக தாமும் வரிசையில் நின்று பொருட்களை வாங்கிச் சென்றார்.

அமெரிக்கா, முதல் தரமான மோட்டார் கார்களை உலகத்தில் உற்பத்தி செய்கின்ற நாடாகும்.

இருந்த போதிலும் தாம் ஓய்வு பெற்றபோது வாங்கிய மோட்டார் காரையே அவர் 26 ஆண்டுகள் வரை பாவித்திருந்தார்.

அதீத முதுமை காரணமாக அவர் பின்னர் சக்கர நாற்காலியில் தமது இறுதிக் காலத்தைக் கழித்தார்.

தமது பிள்ளைகளினதும் உதவியாளர்களினதும் பராமரிப்பில் வாழ்ந்த ஜிம்மி காட்டரின் மனைவி ரோஸலின் காட்டர் ஒரு நல்ல துணைவியாராக வாழ்ந்து 2023ஆம் ஆண்டு காலமானார்.

ஜிம்மி காட்டர் தம்பதியருக்கு நான்கு பிள்ளைகளிருக்கின்றனர் இவர்களது மணவாழ்க்கை எழுபத்து ஏழு (77) ஆண்டுகள் நீடித்திருந்தது.

அமெரிக்க முன்னாள் அதிபர்களில் பலர் தமக்கென தனிப்பட்ட விமானங்களை வைத்திருந்தனர்.

இது தவிர வேறு விமானங்களில் செல்லும் போது விமானத்தின் பிரத்தியேக சொகுசுப் பயண பகுதிகளிலேயே பயணிப்பர்.

ஆனால் ஜிம்மி காட்டர் தமக்கென விமானங்களை வைத்திருக்கவில்லை.

விமானப் பயணங்களின் போது சாதாரண பயணிகளோடு ஒருவராகவே அவர் பயணித்திருந்தார்.

அமெரிக்க அதிபராக இருந்து ஒய்வு பெற்ற பின்னர் ஒரு சிறந்த கிறிஸ்தவ பாரம்பரிய வாழ்க்கை முறையில் அவர் வாழ்ந்திருந்தார்.

சமயப் பேச்சுக்கள் மற்றும் சமூக, பொருளாதார, மனிதாபிமான நடவடிக்கைகள் குறித்து அவர் ஆர்வம் காட்டினார்.

தமது சேமிப்பில் ஏறத்தாள முப்பது மில்லியன் டொலர்கள் வரை மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக அவர் செலவிட்டிருந்தார்.

இந்த மனிதாபிமான நடவடிக்கைகளில் வறுமையான நாடுகளில் சிறுவர்களுக்கு வரக்கூடிய கண்வியாதிகள், போஷாக்கின்மையால் வருகின்ற நோய்களுக்காக தம்மால் ஸ்தாபிக்கப்பட்ட ஜிம்மி காட்டர் நிறுவனம் மூலமாக உதவிகளை வழங்கினார்.

அத்துடன் அமெரிக்க அதிபர்களாக இருந்தவர்கள் ஓய்வு காலத்தில் பல நாடுகள், பல்கலைக்கழகங்கள், மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களால் விரிவுரைகளை நடத்துவதற்கு அழைக்கப்படுவதுண்டு.

அப்போது அவர்களுக்கு வழங்கப்படுகின்ற கட்டணங்களைக்கூட மனிதாபிமான நடவடிக்கைகளுக்காகவே ஜிம்மி காட்டர் செலவிட்டிருந்தார். ஜிம்மி காட்டருக்கு மிகவும் பிடித்தமான பணியே வீடற்றவர்களுக்கு  வீடுகளைக் கட்டிக்கொடுப்பதாகும்.

தாமாகவே தமது கைப்படவே தமது பணியாட்களோடு இணைந்து சிறந்த வீடுகளை அவர் வீடற்றவர்களுக்கு அமைத்துக் கொடுத்திருந்தார்.

இந்த வீடமைக்கும் பணியில் அவரும் பணியாட்களோடு ஒருவராக இணைந்து கட்டப்படும் வீடுகளின் அடிப்படைத் தேவைகள் சரிவர இருப்பதை உறுதி செய்து தமது பணிகளை மேற்கொண்டார்.

தமது நாட்டில் மட்டுமல்ல. உலக அமைதிக்காகவும் ஜிம்மி காட்டர் ஆன்மீக உணர்வோடு பணியாற்றினார்.

வல்லரசுப் போட்டிகள் மற்றும் அன்றைய சோவியத் சோஷலிஸ குடியரசுடன் அமெரிக்காவுக்கு நிலவிய ஆயுதப்போட்டி போன்றவற்றில் ஜிம்மி காட்டர் அதிகம் ஆர்வம் காட்டவில்லை.

இதன் காரணமாக அவரது ஆட்சிக் காலம் அமெரிக்காவில் கெடு பிடியான இராணுவ நடவடிக்கைக்கு இடந்தந்திருக்கவில்லை.

நோபல் சமாதான பரிசை இதுவரை நான்கு அமெரிக்க ஜனாதிபதிகள் வென்றுள்ளனர். முதலாவதாக தியோடோ ரூஸ் வெல்ட் வென்றிருந்தார்.இரண்டாவதாக வூட்ரோ வில்சன், மூன்றாவதாக ஜிம்மி காட்டர் மற்றும் நான்காவதாக பரக் ஒபாமா பெற்றிருந்தார்.

அவர் தமது நோபல் பரிசு பணத்தின் பெரும் பகுதியைக்கூட மனிதாபிமானப் பணிகளுக்கே ஜிம்மி காட்டர் வழங்கியிருந்தார்.

அமெரிக்க அதிபர்களில் நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர். இவர்களில் முதலாவதாக சுட்டுக்கொல்லப்பட்டவர் ஆபிரகாம் லிங்கன், இரண்டாவதாக ஜேம்ஸ் ஏ. கார்பீல்ட், மூன்றாவது ஜனாதிபதி வில்லியம் மெக்கின்ஸ், நான்காவது ஜனாதிபதி ஜோன் எப் கென்னடி. இதுதவிர சில அமெரிக்க ஜனாதிபதிகள் மயிரிழையில் கொலை முயற்சியிலிருந்து தப்பியிருந்தனர்.

ஆனால் ஜிம்மி காட்டர் ஓர் அப்பளுக்கற்ற தலைவராக அமெரிக்காவில் மட்டுமல்ல. சர்வதேச ரீதியாகவும் மதிக்கப்பட்டிருந்தார்.

அமெரிக்காவின் 39ஆவது ஜனாதிபதியாக வாழ்ந்த ஜிம்மி காட்டரின் இறுதிச்சடங்குகள் பூரண அரச மரியாதைகளுடன் ஜனவரி இன்று 9-ந்திகதி இடம்பெறவுள்ளது.

அமெரிக்க தலைநகர் வாஷங்டனில் அவரது பூதவுடல் பாரம்பரிய பீரங்கி வண்டியில் ஏற்றப்பட்டு குதிரைப் படையினரால் மரத்தினாலும் இரும்பினாலுமான தயாரிக்கப்பட்டுள்ள அப் பீரங்கி வண்டி கொண்டு செல்லப்படும். இப்பீரங்கி வண்டி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

அமெரிக்க அதிபராக இருந்து மறைந்தவர்களது பூதவுடல்கள் இந்த பீரங்கி வண்டியிலேயே கொண்டு செல்லப்படுலது வழக்கமாகும்.

ஜிம்மி காட்டரது பூதவுடலும் இப் பீரங்கி வண்டியிலேயே கொண்டு செல்லப்பட்டு 2023ஆம் ஆண்டு மறைந்த அவரது மனைவி ரொஸலின் காட்டரின் கல்லறைக்கு அருகிலேயே நல்லடக்கம் செய்யப்படும்.

-அனந்த பாலகிட்ணர்-

        

அண்மைய பதிவுகள்