ஹிஸ்புல்லாஹ்களுக்கு எதிரான தாக்குதலில் தலைவர்களை அழித்துவிட்டோம்.-- இஸ்ரேல் பிரதமர் தெரிவிப்பு

2 months ago


ஹிஸ்புல்லாஹ்களுக்கு எதிரான தாக்குதலில் அதன் தலைவர் சையது ஹசன் நஸ்ரல்லா மட்டுமல்ல அவருக்கு அடுத்த படியாக அறியப்பட்ட தலைமை அதற்கு அடுத்தவர், அடுத்தவருக்கு அடுத்தவர் என அனைவரையும் அழித்துவிட்டோம்" என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலுக்குள் கடந்த ஆண்டு ஒக்ரோபர் 7ஆம் திகதி புகுந்த ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.

இதற்குப் பதிலடியாக காஸாவை கைப்பற்ற இஸ்ரேல் படைகள் போர் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், ஹமாஸூக்கு ஆதரவாக ஹிஸ்புல்லாஹ் அமைப்பு தாக்குதல் நடத்தியது.

இதையடுத்து, ஹிஸ் புல்லாஹ்வுக்கு எதிராகவும்          இஸ்ரேல் இராணுவம் தாக்குதல்களை நடத்தி வருகின்றது.

இந்த நிலையில், லெபனான் மக்களுக்கு காணொலி அறிவிப்பு ஒன்றை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வெளியிட்டார்.

அந்த அறிவிப்பில் “நாங்கள் ஹிஸ்புல்லாஹ்களின் அனைத்து பலங்களையும் சிதைத்துவிட்டோம்.

நஸ்ரல்லாவை மட்டுமல்ல அவருக்குப் பின்னர் நியமிக்கப்பட்ட தலைமை, அவருக்கு மாற்று, மாற்றத்துக்கு மாற்று என அடுத்த வாரிசுகள் அனைத்தையும் வீழ்த்திவிட்டோம்.

லெபனான் மக்கள் இனி தங்களின் தேசத்தை ஹிஸ்புல்லாஹ்களின் பிடியில் இருந்து பாதுகாக்க வேண்டும்.

லெபனான் ஒரு காலத்தில் அழகுக்கும், சகிப்புத் தன்மைக்கும் அறியப்பட்டது.

ஆனால், இப்போது குழப்பங்களுக்கும் போருக்கும் அறியப்படுகிறது. இதற்கு ஹிஸ்புல்லாஹ்களே காரணம்.

லெபனான் மக்களே உங்களுக்கு சிறப்பான எதிர்காலம் வேண்டாமா?. அப்படியென்றால், உங்கள் தேசத்தை நீங்கள் மீட்டெடுங்கள்.

தீவிரவாதிகள் பிடியில் உங்கள் தேசம் இனியும் சிக்கிக் கொள்ளாமல் எச்சரிக்கையாக இருங்கள்"- என்று கூறியுள்ளார். 

அண்மைய பதிவுகள்