வடக்கில் மூன்று முதலீட்டு வலயங்களை நிறுவ நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார உலக வங்கிப் பிரதிநிதிகளிடம் தெரிவிப்பு
வடக்கின் அபிவிருத்திக்கு அதிக கவனம் செலுத்தப் பட்டுள்ளதாகவும், வடக்கில் மூன்று முதலீட்டு வலயங் களை நிறுவ நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார உலக வங்கிப் பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்கவுக்கும் உலக வங்கி பிரதிநிதிகளுக்கும் இடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற சந்திப்பின்போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், கிளீன் சிறிலங்கா, கிராமிய வறுமை ஒழிப்பு மற்றும் டிஜிற்றல் மயமாக்கல் திட்டங்களுக்கு உலக வங்கியிடமிருந்து நிதி மற்றும் தொழில் நுட்ப உதவிகளை வழங்க இதன்போது உடன்பாடு தெரிவிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் கல்வி, எரிசக்தி, டிஜிற்றல் மயமாக்கல் மற்றும் வடக்கு அபிவிருத்தி ஆகியவற்றில் புதிய திட்டங்களுக்கு உதவி வழங்குவது குறித்து இதன்போது கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.
உலக வங்கி இலங்கைக்கு வழங்குவதற்கு அங்கீகரிக்கப்பட்டுள்ள கடன் உதவியை உரிய சமயத்தில் வழங்க நடவடிக்கை எடுப்பதாக மார்டின் ரேசர் தெரிவித்தார்.
மேலும் இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார-
கல்வித்துறை முன்னேற்றத்தின் மூலம் கிராமிய வறுமையை ஒழிக்க முடியும் என்றும் அதற்காக புதிய அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ள கல்வி சீர்திருத்த முயற்சிகளுக்கும், பொதுப் போக்குவரத்துத் துறையின் முன்னேற்றத்திற்கும் தேவையான உதவிகளை வழங்குமாறு உலக வங்கிப் பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுத்தார்.
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டதுடன் 2025 ஆம் ஆண்டில் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கான புதிய திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும் இந்த கலந்துரையாடலின் போது ஆராயப்பட்டது.
விமான நிலையம் மற்றும் துறைமுக அபிவிருத்திக்கான புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும், துறைமுக அபிவிருத்தியை துரிதமாக மேற்கொள்ள இருப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார தெரிவித்தார்.
குறிப்பாக வடக்கின் அபிவிருத்திக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், வடக்கில் மூன்று முதலீட்டு வலயங்களை நிறுவ நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
வடக்கில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும், நீர் வசதிகளை வழங்கவும்,
வடக்கு மக்களின் சமூகப் பிரச்சினைகளுக்கு கலாசார அடையாளத்தைப் பாதுகாக்கும் வகையில் தீர்வு வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார தெரிவித்தார்.