விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு 10 சதவீத கழிவு அறவிடப்படுவது இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து முழுமையாக நிறுத்தப்பட வேண்டும் என வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் விடுத்திருந்த பணிப்புரைக்கு அமைவாக யாழ். மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆளுநருக்கு உள்ளுாராட்சி உதவி ஆணையாளரால் எழுத்து மூலமாக தெரியப்படுத்தப்பட்டது.
இது தொடர்பில் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் பொ. சிறீவர்ணனால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த காலங்களில் மத்திய அமைச்சர்களாலும் எமது மாகாண சபைக்கு உரித்தான முதலமைச்சராலும் காலத்துக்கு காலம் பதவியிலிருந்துள்ள ஆளுநர்களாலும் மற்றும் எமது திணைக்கள தலைவர்களாலும் இந்தப் பிரச்சினை தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இருந்த போதிலும் இப் பிரச்சினையை எம்மால் 100 சதவீதம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.
சந்தைகளை குத்தகைக்கு வழங்கும் போது சந்தைக் குத்தகை ஒப்பந்தங்களில் 10 சதவீதக் கழிவு அறவிடப்பட முடியாது என்ற இறுக்கமான வாசகங்கள் உட்படுத்தப்பட்டு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
சந்தைகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள காட்சிப் பலகைகளிலும் வியாபாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் மற்றும் அனைவருக்குமே தெரியக் கூடியதாக இவ் 10 சதவீதக் கழிவு அறவிடப்படுவது சட்ட முரணானது என்பது தொடர்பாக தகுந்த காட்சிப்படுத்தல்கள் சந்தைகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.