தமிழ் அரசுக் கட்சியை விட்டு வெளியே வர எமக்கு விருப்பமில்லை.-- ஈ.சரவணபவன் தெரிவிப்பு

2 months ago



இலங்கை தமிழ் அரசுக் கட்சியை விட்டு வெளியே வருவதற்கு எமக்கு விருப்பமில்லை.-- முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவிப்பு

ஒன்றும் செய்ய முடியாத நிலையில் ஜனநாயகம் மூலம் எமது பலத்தை காட்டவேண்டியிருக்கிறது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்தார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியில் அதிருப்தி அடைந்த குழுவினர் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் ஜனநாயக தமிழ் அரசு கூட்டமைப்பு என்ற பெயரில் சுயேட்சையாக களமிறங்கி வேட்புமனு தாக்கல் செய்தனர்.

வேட்புமனுத் தாக்கலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே ஈ.சரவணபவன் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள் இலங்கை தமிழ் அரசுக் கட்சியில் இருந்து வந்தோம். அங்கே ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டுக் கொண்டு வருகிறது.

தனிநபர் ஆதிக்கத்தால் அங்கிருந்து பலர் வெளியேறி விட்டார்கள். இறுதியில் தலைவரும் இராஜினாமா செய்தார். நீண்டகாலமாக இருந்த சட்டத்தரணி தவராசாவும் விலகிவிட்டார்.

யார் யார் விலகினார்கள் என்பதை 2009க்கு பின்னர் அடுக்கி கொண்டே போகலாம்.

எல்லோரும் யாழ் மண்ணில் இருந்தார்கள்.

யாழ் மண்ணில் இல்லாத ஒருவரால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு ஜனநாயக கட்சி என்று சொல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வீட்டை விட்டு வெளியே வருவதற்கு உண்மையில் எமக்கு விருப்பமில்லை.

ஒன்றும் செய்ய முடியாத நிலையில் ஜனநாயகம் மூலம் எமது பலத்தை காட்டவேண்டியிருக்கிறது. மக்களை ஒன்று சேர்த்து எல்லோரையும் அணி திரட்ட வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். 

நாங்கள் தற்போது சுயேட்சையாக போட்டியிட்டாலும் நாளடைவில் அது கட்சியாக பரிணமிக்கும்.

ஜனநாயக தமிழ் அரசு கூட்டமைப்பு என்ற பெயரும் வைக்கப்பட்டு விட்டது.

எமது இலக்கு இளைஞர்கள் பயிற்றப்பட்டு ஒரே வழியில் கட்சியை வழிநடத்த வேண்டும்.

அதற்கான முழு முயற்சியை நாம் எடுப்போம்.

ஜனநாயகம் தழைத்து சர்வாதிகாரம் தோற்க வேண்டும் என்றார்.

அண்மைய பதிவுகள்