இடதுசாரித்துவத்தை கொண்ட ஜே.வி.பி இன்று சிங்கள தேசியத்துடன் இணைவு.-- வேட்பாளர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவிப்பு
இடதுசாரித்துவத்தை அடித்தளமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி இன்று சிங்கள தேசிய வாதத்தோடு இணைந்து செயற்படுகின்றது.
இம்முறை தமிழ்த் தரப்பைப் புறந்தள்ளி புதிய அரசை அமைக்க முடியாது."
இவ்வாறு ரெலோவின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட வேட்பாளருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
இன்று(31) வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
"தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமை தொடர்பாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் வெளியிடப்பட்டுள்ள ஆதங்கம் உண்மையானது.
அதனை நாம் ஏற்றுக்கொள்கின்றோம்.
ஆசனங்களுக்காகவே பிரிந்து நிற் கின்றோம் எனக் கூறினார்கள். இந்தத் தேர்தலில் தமிழ்க் கட்சிகளாகிய நாம் அனைவரும் ஒரு பொதுச் சின்னத்தின் கீழ் போட்டியிடுவோம் என்று முயற்சிகளை எடுத்திருந்தோம். அது சாத்தியப்படவில்லை.
எனவே, அது மனவேதனையைத் தருகின்றது.
திருகோணமலை மற்றும் அம்பாறையில் ஒன்று சேர்ந்து போட்டியிடத் தீர்மானித்தோம். ஆனால், அம்பாறையில் தமிழரசுக் கட்சி குழப்பிவிட்டது.
அம்பாறையில் பிரதிநிதித்துவம் இழக்கும் நிலை தமிழரசுக் கட்சியால் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் நாம் ஐந்து கட்சிகள் தற்போது ஒன்றாக இருக்கின்றோம். ஏனையவர்களையும், உள்ளே கொண்டு வருவதற்கான முயற்சிகளைத் தொடர்ந்தும் செய்வோம்.
மக்கள் கோபத்தில் உள்ளார்கள். நாங்கள் பிரிந்ததால் அவர்கள் வெறுப்படைந்து உள்ளார்கள். நாங்கள் போகும்போது அவர்கள் நேரடியாகவே கூறுகின்றார்கள்.
தேர்தலின் பின்னராவது தமிழ்க் கட்சிகள் இணைந்து செல்வதற்கான வாய்ப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும்.
அத்துடன் தேர்தலின் பின்னர் ஒற்றுமையை விரும்பாதவர்கள் மீது மக்களின் கோபம் பிரதிபலித்திருக்கும்.
அவ்வாறு மக்கள் பாடம் புகட்டும்போது ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்படலாம்.
எனவே, மக்களின் விருப்பத்துக்கு மாறாகச் செயற்படுபவர்களை அவர்களே பார்த்துக்கொள்வார்கள்.
கடந்த அரசில் அரச ஊழியர்க ளுக்கான சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால். இந்த அரசும் புதிய ஜனாதிபதியும் அது தொடர்பான கருத்துக்களைக் கூற மறுக்கின்றனர்.
எனவே, அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்படவுள்ளதாகச் சொல்லப்பட்ட ஊதியம் கூட்டப்பட வேண்டும். எமது கட்சி இதற்காகத் தொடர்ந்தும் குரல் கொடுக்கும்.
நாடாளுமன்றத் தேர்தலில் ஆசனங்களைக் கூடுதலாக எடுக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டே ஊழல் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என அரசால் காட்டப்படுகின்றது.
அத்துடன் மாகாண சபை முறைமையை ஒழிக்க வேண்டும் என்பது இந்த அரசின் குரலாக உள்ளது.
குறிப்பாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ஒழிக்க வேண்டும் என்று குரல் கொடுத்தவர்கள் இவர்களே.
ஆனால், அதனை நீக்குவதற்கான சூழலில் அவர்கள் இருப்பது போல் தெரியவில்லை.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இடதுசாரித்துவத்தை அடித்தளமாக்க் கொண்டு உருவாக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி இன்று சிங்கள தேசியவாதத்தோடு இணைந்து செயற்படுகின்றது.
அந்தவகையில் திடமான ஒரு அரசு அமைவதற்கான வாய்ப்புக்கள் குறைவாகவே இருக்கும்.
எனவே. நாம் 11 ஆசனங்களைப் பெறும்போது அதிகாரம் மிக்கவர்களாக இருப்போம்.
இம்முறை தமிழ்த் தரப்பைப் புறந்தள்ளி புதிய அரசை அமைக்க முடியாது.
அதனை நிர்ணயிக்கின்ற சக்தியாகத் தமிழ்த் தரப்பு இருக்கும்." -என்றார்.
தேர்தலில் தமிழ்க் கட்சிகளாகிய நாம் அனைவரும் ஒரு பொதுச் சின்னத்தின் கீழ் போட்டியிடுவோம் என்ற முயற்சிகளை எடுத்திருந்தோம்.
அது சாத்தியப்படவில்லை. எனவே, அது மனவேதனையைத் தருகின்றது.