தமிழரசுக்கட்சி அழிந்தாலும் கட்சி தனது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதே சுமந்திரனின் நிலைப்பாடு அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் தெரிவிப்பு
தமிழரசுக்கட்சி சிதைந்தாலும், அழிந்தாலும் பரவாயில்லை, கட்சி தனது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதே சுமந்திரனின் நிலைப்பாடு என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய இயக்குநருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
வவுனியாவில் இடம்பெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் சீ.வி. கே.சிவஞானம் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
மாவை சேனாதிராசாவை மாற்ற வேண்டும் என்றால், அல்லது அவர் பதவியிலிருந்து விலகியுள்ளார் எனில் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட தலைவராக சிறீதரன் இருக்கின்றார். அவரைத் தலைவராகத் தெரிவு செய்வதுதான் ஒரு அறநெறிக்கு உட்பட்டதாகும்.
அதைவிடுத்து அதைப்பற்றி எதுவுமே பேசாமல் சி.வி.கே.சிவஞானம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அதற்கமைய மத்திய குழுவை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து தனக்குச் சார்பான செயற்பாடுகளை முன்னெடுக்கின்ற நடவடிக்கைகளில் சுமந்திரன் மும்முரமாக இருக்கின்றமை தெளிவாகின்றது.
அதுமட்டுமின்றி சுமந்திரன் தரப்போடு முரண்பட்ட பலரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
அதற்கான தீர்மானமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே சுமந்திரனின் இந்த தன்முனைப்புச் செயற்பாடுகளால் ஒரு குறுகிய காலத்திலேயே இலங்கைத் தமிழரசுக் கட்சி வடக்கிலே இருந்த இடம் தெரியாமல் அழிந்து போகக்கூடிய சூழல் வரலாம் - என்றார்.