சர்வதேச நாணய நிதியத்திடம் கடனைப் பெறும் இலங்கை அரசு அதனை கடனாகவே பொருட்படுத்தவில்லை. அதனால் தான் இலங்கைக்கு வழங்கப்பட்ட ஐ. எம். எவ் வின் நிதி உதவி 100 கோடி டொலர்களாக உயர்வடைந்துள்ளது.
உத்தியோக பூர்வ கடன் வழங்குநர்களுடனான கடன் மறுசீரமைப்பில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வதில் காணப்படும் தாமதத்தால் இலங்கையின் பொருளாதாரம் தொடர்ந்தும் எச்சரிக்கை நிலையிலேயே காணப்படுகின்றது.
பொருளாதாரத்தை சரியான பாதைக்கு கொண்டு வருவதற்காக கடன் மறுசீரமைப்பு செயன்முறையை இலங்கை விரைவுபடுத்துவது அவசியமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அடிப்படையில் மூன்றாவது தவணையாக தற்போது 336 மில்லியன் டொலரை ஐ. எம். எவ். இலங்கைக்கு விடுவித்துள்ளது. முன்னதாக 2 தவணைகளில் 667 மில்லியன் டொலர் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடனை மீட்பதற்காக அந்தக் கடன் எதற்காக பயன்படுத்தப்பட்டது அதனூடாக மீட்டது என்ன என்று பார்க்காமல் மக்களிடம் வருகிறார்கள். எந்த வழியில் மக்களிடம் பணத்தை எடுக்க முடியும் என்பதை ஆலோசித்து வருகிறார்கள்.
அதன் முதல் அரசின் வேலைத் திட்டம் குடியிருப்பு சொத்துகளுக்கு விதிக்கப்படும் வரியின் பிரகாரம் வாடகை வீடுகளுக்கு வருமானவரியை அறிமுகப்படுத்த சர்வதேச நாணய நிதியம் முன்மொழிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் அரசாங்கத்தின் வருவாயை அதிகரிக்கும் நடவடிக்கையாக இலங்கையுடனான கடன்வசதி திட்டத்தின் இரண்டாவது மீளாய்வின் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்தவிடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொத்துவரி முறையை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சட்டக் கட்டுப்பாடுகளின் தாமதம் காரணமாக இந்தப் புதிய வாடகை வருமான வரியை அறிமுகப்படுத்தும் யோசனையை சர்வதேச நாணயநிதியம் முன்மொழிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதில் இருந்து என்ன தெரிகிறது சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கிய கடனை மீள எடுப்பதற்கான வழியை அரசிடம் சொல்கிறது. தான் வழங்கிய கடனை அரசிடம் கேட்காமல் மக்களிடம் திரும்புகிறது.
கடனைப் பெற்று அதனை திருப்பிச் செலுத்தாத இலங்கை, மக்களிடம் இருந்து வரி என்று சொல்லி பணத்தை அறவிட ஆரம்பித்துள்ளது.
இன்னும் மக்களிடம் இருந்து எதற்கெல்லாம் வரியை அறவிடவுள்ளது என்பது போகப் போகத்தான் தெரிய வரும். அரசு, அரச அதிகாரிகள் பொறுப்பில்லாமல் கடனாகப் பெற்ற பணத்தை செலவு செய்து அதில் வருவாய் இல்லாமல் பெரும் கடன் சுமையை மக்களின் தலையில் சுமத்தவுள்ளது.
அரச மட்டங்களில் நெருங்கிய தொடர்பில் இருக்கும் 10 பேர் இரு அரச வங்கிகளுக்கு 65 ஆயிரம் கோடி ரூபாயை மோசடி செய்து கடன் செலுத்துவதை தவிர்த்துள்ளனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
இதனால் சாதாரண பிரஜை ஒருவருக்கு வங்கிக் கடன் வழங்கமுடியாத நிலைமைக்கு வங்கிகள் தள்ளப்பட்டுள்ளன.
20 வருடங்களாக வங்கிக் கடனை மீளச் செலுத்தாது வெவ்வேறு வழி முறைகளில் செயற்பட்டு வருகின்றனர். வங்கிகளிலும் காணப்படுவது நாட்டின் சாதாரண மக்கள் வைப்பிலிட்ட பணம், சராசரியாக ஒரு மாதத்தில் பெறப்பட்ட உள்நாட்டுக்கடன் தொகை 775 பில்லியன் ரூபாவைத் தாண்டியுள்ளதாகவும். ஒருநாளில் எடுக்கப்பட்ட சராசரி கடன் தொகை சுமார் 25 பில்லியன் ரூபாவாக குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் பேராசிரியர் சுட்டிக்காட்டினார்.
சர்வதேச நாணய நிதியம் இந்த நாட்டை மேலும் குட்டிச்சுவர் ஆக்கவுள்ளது.