தமிழ்நாட்டில் இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் ஏ ஆர் ஆர் ஃப்லிம் சிட்டியில், 'யூ ஸ்ட்ரீம்' எனும் பெயரில் மெய்நிகர் தயாரிப்பு கூடத்தை திறந்தார்.
இசை துறையில் சர்வதேச அளவில் பல சாதனைகளை படைத்து வரும் இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் சென்னையில் உள்ள ஏ ஆர் ஆர் ஃப்லிம் சிட்டியில், 'யூ ஸ்ட்ரீம்' எனும் பெயரில் அதி நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய மெய்நிகர் தயாரிப்பு கூடம் ஒன்றினை தொடங்கி இருக்கிறார்.
தமிழ் திரையிசை உலகில் இசையில் புதிய புதிய ஒலிகளை இணைத்து பாடல்களையும், பின்னணி இசையையும் வழங்கி ரசிகர்களை தொடர்ந்து மகிழ்வித்து வருபவர் 'இசைப்புயல்' ஏ. ஆர். ரஹ்மான்.
தொழில்நுட்பம் வளர வளர அதன் பயன்பாட்டினை இசைத் துறையில் முழுமையாக பயன்படுத்தும் வகையில் பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் ஆர்வம் கொண்ட ஏ. ஆர். ரஹ்மான்- தற்போது சென்னையில் 'யூ ஸ்ட்ரீம்' எனும் பெயரில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மெய்நிகர் தயாரிப்பு கூடத்தை தொடங்கி இருக்கிறார்.
இதற்காக அவர் தொழில் துறையின் முன்னோடியான ஸ்ரீதர் சந்தானத்துடன் இணைந்திருக்கிறார்.
இதற்கான தொடக்க விழாவில் இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச திரையுலக பிரபலங்கள் பங்குபற்றினர்.
இந்நிகழ்வில் ஏ. ஆர். ரஹ்மான் பேசுகையில், " கலையும், நவீன தொழில்நுட்பமும் உயர்தரத்தில் சங்கமிக்கும் இடமாக 'யூ ஸ்ட்ரீம்' அமைந்துள்ளது.
நவீன தொழில்நுட்பங்கள் மூலமாக இந்திய கதைச் சொல்லலை சர்வதேச பார்வையாளர்களுக்கு கொண்டு செல்ல முடியும்.
தயாரிப்பாளர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இந்த நவீன தொழில்நுட்பம் புதிய வாய்ப்புகளையும் அளிக்கும்." என்றார்.