முல்லைத்தீவு கொக்கிளாய் புளியமுனையில் அமையவுள்ள சமூகம்சார் சுற்றுச்சூழல் சுற்றுலா மையத்துக்காக சுற்றுலா அமைச்சு 9.6 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

3 days ago



முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் புளியமுனைக் கிராமத்தில் அமையவுள்ள சமூகம்சார் சுற்றுச்சூழல் சுற்றுலா மையத்துக்காக சுற்றுலா அமைச்சு முதற்கட்டமாக 9.6 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்தத் திட்டம் முல்லைத்தீவு மாவட்டச் செயலகம், சுற்றுலா அமைச்சு, வடமாகாண சுற்றுலாப் பணியகம், கரைத்துரைப்பற்று பிரதேச செயலகம் மற்றும் பிரதேசசபை, கொக்கிளாய் மேற்கு சுற்றுச்சூழல் சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் என்பவற்றின் கூட்டிணைப்புடன் செயற்படுத்தப்படவுள்ளது.

இதுதொடர்பான விசேட கலந்துரையாடல் மாவட்டச் செயலர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் புளியமுனைக் கிராமப் பொது மண்டபத்தில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இடம்பெற்றது.

கலந்துரையாடலில் இந்தத் திட்டத்தை செயற்படுத்தும் பொருட்டு 'கொக்கிளாய் மேற்கு புளியமுனை சுற்றுச்சூழல் சுற்றுலா மேம்பாட்டுச் சங்கம்' எனும் சமூக அமைப்பு உருவாக்கப்பட்டதுடன் அதற்கு நிர்வாகிகளும் தெரிவு செய்யப்பட்டனர்.