சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை. வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு
சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை. வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு
சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு கனமழை முதல் மிக கனமழை வரையும் ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும் என்பதால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படுவதாக தென்மண்டல வானிலை ஆய்வு மைய துணைத் தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழகத்தில் 42 இடங்களில் கனமழை பெய்துள்ளது.
கனமழை எச்சரிக்கையை பொறுத்தவரை அடுத்துவரும் 24 மணி நேரத்திற்கு திருவள்ளூர் சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரையும் ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக் கூடும்.
இதனால் இப்பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
ராணிப்பேட்டை வேலூர் திருவண்ணாமலை விழுப்புரம் புதுச்சேரி கடலூர் மயிலாடுதுறை காரைக்கால் திருவள்ளூர் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும் திருப்பத்தூர் தருமபுரி கள்ளக்குறிச்சி திருச்சிராப்பள்ளி தஞ்சாவூர் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
நாளை திருவள்ளூர் சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு இந்த மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரையும் ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும்.
வேலூர் திருப்பத்தூர் திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும்.
திருப்பத்தூர் தருமபுரி சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
17-ஆம் தேதி வடமேற்கு மாவட்டங்களான திருப்பத்தூர் தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை அடுத்த இரு தினங்களுக்கு கனமழை முதல் மிக கனமழையும் ஒரு சில பகுதிகளில் அதி கனமழையும் பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தவரை குமரிக்கடல் மன்னார் வளைகுடா உள்ளிட்ட தமிழக கடலோர பகுதிகளில் இன்று 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் 16,17 தேதிகளில் வட தமிழக கடலோர பகுதிகளில் ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் அவ்வப்போது 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தற்போதைய நிலவரப்படி காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலைகொண்டுள்ளது.
அடுத்து வரும் 24 மணி நேரத்தில் மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழகம் தெற்கு ஆந்திரா ஒட்டிய பகுதிகளை நெருங்க கூடிய சூழல் உள்ளது.