ஜனாதிபதி தேர்தல் அறிவிப்புக்கள் வெளிவர உள்ள நிலையில் 22 ஆவது திருத்த சட்டம் தேவையா? ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் அறிவிப்புக்கள் வெளிவர உள்ள நிலையில் 22 ஆவது திருத்த சட்டம் தேவையா? இது தேர்தலை குழப்புவதற்கான ஏற்படா? எனும் சந்தேகம் தற்போது பலரிடம் ஏற்பட்டுள்ளதாக ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று சனிக்கிழமை (20) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
22ஆம் திருத்த சட்டத்தை கொண்டு வருவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. இந்த சட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கும் போது இந்த திருத்தம் தேவையா? எனும் கேள்வி எழுகிறது.
இப்போது ஏன் அவரசப்பட்டு மாற்ற முனைகிறார்கள் என தேர்தலை குழப்பும் நடவடிக்கையாக இருக்கும் என சந்தேகிக்கிறோம்.
உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நாடு வக்குரோத்துக்கு போய் விட்டது என தேர்தலை கால வரையின்றி ஒத்தி வைத்துள்ளனர்.
தேர்தல் இரத்து செய்யப்படவில்லை. அதனால் வேட்பு மனுக்கான காசு திருப்பி கொடுக்கவில்லை. சுயேட்சைக்காக போட்டியிட்ட வேட்பு மனு தாக்கல் செய்தவர்களுக்கு வேட்பு மனு காசு அதிகம். அவர்களின் காசு திருப்பி கொடுக்கவில்லை.
இவ்வாறான நிலையில் ஜனாதிபதி தேர்தல் விரைவில் நடைபெறலாம் என்ற நிலை காணப்படுகிற போது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அபிவிருத்தி திட்டங்களுக்கு என 5 கோடி ரூபாய் முதல் 10 கோடி ரூபாய் வரையில் ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் மதுபானசாலைகளுக்கான அனுமதிகள் வழங்கப்பட்டு வருகின்றது எனவும் செய்திகள் மூலம் அறிந்து கொண்டேன்.
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு ஆதரவு வழங்க வேண்டும். என்பதற்காகவே, அவ்வாறு அபிவிருத்திக் கோடிக்கணக்கான பணம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் ஜனாதிபதி வேட்பாளர்களாக போட்டியிடக் கூடியவர்கள் யாழ்ப்பாணம் நோக்கி வந்து 13ஆம் திருத்தம் தருவோம் என்கிறனர்.
ஆனால் மாகாண சபை தேர்தல் நீண்ட காலமாக நடத்தப்படாமல் இருப்பது பற்றி கதைக்கவே இல்லை என மேலும் தெரிவித்தார்.