போராளித் தாயின் உடலை சிரமத்தின் மத்தியில் தகனம் செய்தனர் - தம்பா, மைந்தன் போக்கிரிகள் அடாவடி
காணாமல் ஆக்கப்பட்ட போராளி ஒருவரது தாயாரின் உடலைத் தகனம் செய்ய விடாது அடாவடியில் ஈடுபட்ட கும்பல்.
முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்ட போராளி ஒருவரைப் பெற்றெடுத்த தாயாரது இறந்த உடலை பரந்தன் மயானத்தில் தகனம் செய்ய விடாது அடாவடியில் ஈடுபட்ட தேசத்துரோகக் கும்பலின் ஈனச் செயலால் கிளிநொச்சி பரந்தனில் பரபரப்பு.
இது பற்றி மேலும், கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பரந்தன் சிவபுரம் கிராமத்தில் வசித்துவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்ட போராளியான குன்றவையன் (சி.சிவரஞ்சன்) அவர்களைப் பெற்றெடுத்த தாயாரான சி.யோகம்மா (74 வயது) அவர்கள் தனது மகனைப் பல இடங்களிலும் தேடியலைந்த நிலையில் அதனால் ஏற்பட்ட பாதிப்புக்களின் விளைவாக ஏற்பட்ட திடீர் மாரடைப்புக் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை 24.05.2024 மாலை கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்திருந்தார்.
இந்நிலையில் மரணமடைந்தவரது உடலை அவரது வீட்டிற்கு உறவினர்கள் எடுத்துச் சென்ற போது அங்கு சென்ற மைந்தன், தம்பா என்னும் நபர்கள் தலைமையிலான குழுவினர் கண்டாவளைப் பிரதேச செயலகத்தின் அனுமதியுடன் பரந்தன் பகுதியில் நடைபெறும் மரண வீடுகளுக்கு வருபவர்களிடம் தாம் பணம் சேகரித்து வருவதாகாவும் அப்பணத்தில் சிறுதொகையைத் தமது நிர்வாகச் செலவுகளுக்கா எடுத்துவிட்டு மிகுதியை மரணமடைந்தவர்களது உறவினர்கள் விரும்பினால் அவர்களிடம் வழங்குவதாகவும் கூறி மரண வீட்டிற்கு வருபவர்களிடம் பணம் சேகரிக்க முற்பட்டனர்.
அதனை அனுமதிக்க மறுத்த உறவினர்களுடன் முரண்பட்டதுடன் 'இந்த மரண வீட்டில் இறுதிக் கிரியைகள் செய்ய நாம் விடமாட்டோம், கிராமத்து மக்கள், வெளியிலிருந்து வரும் உறவினர்களைக்கூட கிராமத்திற்குள் வந்து இந்த மரண வீட்டிற்குச் செல்ல விடாமல் நாம் தடுத்து நிறுத்துவோம்.
பரந்தன் சிவபுரம் கிராமம் எமது கட்டுப்பாட்டின் கீழ்த்தான் உள்ளது. இதற்கு பரந்தன் கிராம அலுவலரும் கண்டாவளைப் பிரதேச செயலாளரும் அனுமதி வழங்கியுள்ளார்கள்.
அவர்களது அனுமதியுடன் நாம் சட்ட ரீதியாகத்தான் மரண வீடுகளில் நீண்டகாலமாகப் பணம் சேகரிது வருகின்றோம்.
எமது பணம் சேகரிக்கும் செயற்பாட்டை அனுமதிக்க மறுத்த இவ்வீட்டாரது மரணச் சடங்குகளை நடத்தவிடமாட்டோம், மயானத்தில் தகனம் செய்யவும் விடமாட்டோம் எம்மை மீறிச் செயற்பட்டால் விபரீதமான விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும்' என உறவினர்களை அச்சுறுத்திவிட்டுச் சென்றனர்.
அத்துடன், கிராமத்து மக்களிடமும் வீடுவீடாகச் சென்று மரணச் சடங்கில் கலந்துகொள்ள வேண்டாம் எனவும் தம்மை மீறி மரணச் சடங்கில் கலந்துகொண்டால் விபரீதமான விளைவுகளை எதிர்நோக்கவேண்டி வருவதுடன், பரந்தன் கிராமசேவையாளரும் கண்டாவளைப் பிரதேச யெலாளரும் தமக்கு ஆதரவாக உள்ளமையால் எதிர்காலத்தில் உங்களுக்கு வழங்கப்படும் அரச உதவிகள்கூட கிடைக்காமல் போகலாம்.
இறந்தவர் புலிப் பயங்கரவாத அமைப்பிலிருந்து காணாமல் போனவரது தாயாராக உள்ளமையால் அவரது மரணச் சடங்கில் மக்கள் கலந்துகொள்வதை இலங்கை அரசுகூட அனுமதிக்காது எனக்கூறி ஊர்மக்களைத் தடுக்கும் செயற்பாட்டிலும் ஈடுபட்டிருந்தனர்.
மற்றும் மரணக்கிரியை செய்யச் சென்ற பூசாரியாரையும் செல்லவிடாது தடுத்து நிறுத்தியதுடன் தகனம் செய்வதற்குத் தயாராக மயானத்தில் அடுக்கப்பட்டிருந்த விறகுகளையும் இரவிரவாக எடுத்துச் செல்வதற்கான முயற்சிகளிலும் அக்கும்பல் ஈடுபட்டிருந்தது.
பரந்தன் கோரக்கன்கட்டு மயானத்தில் 26.05.2024 அன்றையதினம் அன்னையாரது உடலைத் தகனம் செய்வதற்காக தயாரானபோது மயானத்திற்குள் நுழைந்த தம்பா என்பவனது தலைமையிலான அடாவடிக்கும்பல் உடலைத் தகனம் செய்வதற்காக உறவினர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தவர்களையும் தகனம் செய்யும் பணியை நிறுத்திவிட்டு வெளியேறுமாறு கூறி அச்சுறுத்தித் துரத்தி அடாவடியில் ஈடுபட்டிருந்தனர்.
அதனைத் தொடரர்ந்து உடலைச் சுமந்து சென்ற உறவினர்களாலேயே தமிழ் மக்களது விடுதலைக்காக தன்னையே போராளியாக அர்ப்பணித்துக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணிப் போராளியான குன்றவையன் அவர்களைப் பெற்றெடுத்த தாயாரது புனித உடல் தகனம் செய்யப்பட்டது.
இவ்விடயம் குறித்து பரந்தன் கிராம சேவையாளருக்கு அறிவிப்பதற்காக பல தடவைகள் உறவினர்களால் தொலைபேசி வழித் தொடர்பெடுத்தபோதும் அவர் அழைப்பை ஏற்றுப் பதிலளிக்கவில்லை எனவும் கிராமத்தில் இச்சம்பவம் நடைபெற்று இன்றுவரை அப்பகுதிக் கிராமசேவையாளர்கூட என்ன நடைபெற்றது என்பது குறித்து விசாரிக்கக்கூடவில்லை எனவும் கூறப்படுகின்றது.
இவ்விடயம் கிளிநொச்சி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களுக்கும் தெரியும் எனவும் அவரும் மரணச் சடங்கிற்குச் சென்றுவிட்டு முன்னதாகவே சென்றுவிட்டதாகவும் இதுகுறித்து எவருமே கண்டுகொள்ளாது மௌனமாகவுள்ளதாகவும் கூறிக் கவலை தெரிவிக்கப்படுகின்றது.
பரந்தன் சிவபுரம் பகுதியிலுள்ள காணாமல் ஆக்கப்பட்ட போராளி குன்றவையன் அவர்களது வீட்டில் தற்போது அவரது சகோரியும் தாயாருமே வசித்து வந்ததார்கள்.
தற்போது தாயாரும் மரணமரடைந்த நிலையில் சகோதரி மட்டுமே உள்ளார்.
இந்நிலையில், அக்கும்பலைச் சேர்ந்தவர்களால் தொலைபேசியில் தொடர்புகொண்டு 'வீட்டில் தற்போது ஒருவர் மட்டுமே உள்ளார் என்பதை நினைக்க வேண்டும் அப்படி இல்லாமல் பணம் சேகரிக்க அனுமதிக்காமல் செயற்பட்டுள்ளார்கள், மரணச்சடங்குகள் முடிவடைந்து உறவினர்கள் விட்டுச் சென்ற பின் தனித்திருப்பவருக்கு கோபத்துடன் இருக்கும் தமது ஆட்களால் என்ன நடந்தாலும் தாம் அதற்குப் பொறுப்பில்லை எனவும் தற்போது அச்சுறுத்தி வருவதாகக் கூறப்படுகின்றது.
தமக்கு கண்டாவளைப் பிரதேச செயலாளர், பரந்தன் கிராம அலுவலரது சட்டபூர்வமான ஆதரவு உண்டு எனக் கூறிக்கொண்டு மரண வீட்டில் சட்டவிரோதமான முறையில் பணம் சேகரிக்க முற்பட்ட போது, தம்மைப் பணம் சேகரிக்க உறவினர்கள் அனுமதிக்கவில்லை என்பதற்காக தமிழ் மக்களின் விடுதலைக்காக நாட்டுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் காணாமல் ஆக்கப்பட்ட போராளி குன்றவையன் அவர்களைப் பெற்றெடுத்த தாயாரது இறந்த உடலைக் கிளிநொச்சி மண்ணிலுள்ள பரந்தன் மயானத்தில் தகனம் செய்ய விடாது அடாவடியில் ஈடுபட்ட தம்பா, மைந்தன் என்பவர்கள் தலைமையிலான அடாவடிக்கும்பலின் செயல் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற ஈவிரக்கமற்ற செயல்களைவிடவும் மிகவும் வெறுக்கத்தக்க வேதனைக்குரிய அநாகரீகமான செயலாகவே பலராலும் நோக்கப்படுகின்றது.