இலங்கை பொறிமுறை ஆணையை மீளப் புதுப்பிக்குமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளிடம் வலியுறுத்து.

4 months ago


இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட கண்காணித்தல் மற்றும் ஆதாரங்களைத் திரட்டுவதற்கான பொறிமுறைக்கான ஆணையை எதிர்வரும் செப்டெம்பர் மாதக் கூட்டத் தொடரின் போது மீளப் புதுப்பிக்குமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளிடம் வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பின்னணியில், இலங்கையின் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரத்தில் மிகமோசமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சமகாலப் போக்குகள் உள்ளடங்கலாக நாட்டின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கினால் கடந்த வாரம் விரிவான அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையின் உள்ளடக்கம் தொடர்பான தமது நிலைப்பாடு மற்றும் இலங்கை விவகாரத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் முன்னெடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை என்பவற்றை உள்ளடக்கிய மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரால் வெளியிடப்பட்ட புதிய அறிக்கையில் அடிப்படை சுதந்திரங்கள் சார்ந்து இலங்கை பல்வேறு புதிய அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுத்திருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2022 இல் தீவிரமடைந்த பொருளாதார நெருக்கடியின் விளைவாக வறுமை மட்டம் இரு மடங்கினால் அதிகரித்துள்ளது.

நாட்டிலுள்ள மொத்தக் குடும்பங்களில் கால்பங்கு குடும்பங்கள் நெருக்கடிக்கு உணவுப் பாதுகாப்பின்மை முகங்கொடுத்திருப்பதாக ஐ.நா மதிப்பிட்டுள்ளது. ஊழல் மோசடிகள் மற்றும் முறையற்ற பொருளாதார நிர்வாகம் தொடர்பான பொறுப்புக் கூறலும், ஜனநாயக மறுசீரமைப்புக்களும் இன்னமும் பெருமளவுக்குப் பூர்த்தி செய்யப்படவில்லை எனவும் உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை தொடர்பில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட கண்காணித்தல் மற்றும் ஆதாரங்களைத் திரட்டுவதற்கான பொறிமுறைக்கான ஆணையை மீளப்புதுப்பிக்குமாறு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளிடம் உயர்ஸ்தானிகர் வலியுறுத்தியுள்ளார்.

அதனை நாம் மீளவலியுறுத்தும் அதேவேளை, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் மேற்குறிப்பிட்ட ஆணையை மீளப்புதுப்பிப்பதற்கு உறுப்பு நாடுகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கின்றோம் என அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.