வடக்கில் குற்றங்களில் ஈடுபடும் பொலிஸார்

7 months ago

கள்ளன் பொலிஸ் விளையாட்டு எல்லோருக்கும் தெரியும். அன்றைய காலங்களில் இளையவர்களின் எண்ணங்களில் நல்ல சிந்தனையை விளைவிப்பதற்காக இப்படியான விளையாட்டை விளையாடுவார்கள்.

இதன் மூலம் சமூகம் நல்ல சிந்தனையுடன் வளரும். இன்று இப்படிப்பட்ட விளையாட்டுகள் இல்லாதது குறை என்று தான் சொல்ல வேண்டும்.

அதற்காக பொலிஸ் கள்ளர் என்று சொல்ல வரலை. சொல்லவும் வைத்துவிடாதீர்கள்.

ஊருக்கு உபதேசம் எனக்கில்லை என்ற பழமொழியை அறிந்திருப்பீர்கள். ஆனால் அதற்கேற்ப நடப்பதற்கு எவருக்கும் விருப்பம் இல்லை.

பொறுப்பு வாய்ந்த துறையைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக நடந்தே ஆகனும் அப்பொழுது தான் முறைகேடுகள் இல்லாமல் நாட்டை வளப்படுத்த முடியும்.

ஒழுக்காற்று விடயத்தில் பல்வேறு முறைகேடுகளை மேற்கொள்ளும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அண்மைக் காலங்களில், பொலிஸ் அதிகாரிகள் தவறான நடத்தைகளில் ஈடுபடும் சம்பவங்கள் அடிக்கடி பதிவாகி வருகின்றன.

இந்த நிலையில் ஏனைய அரச நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது பொலிஸ் திணைக்களத்தினுள் கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதிகாரிகளின் ஒழுக்கம் குறித்து வேறு எந்த அரச நிறுவனத்தையும் விட திணைக்களம் அதிக அக்கறை கொண்டுள்ளது.

எனவே பொலிஸ் அதிகாரிகளால் சிறிய ஒழுங்கு மீறல்கள் நடந்தாலும், அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட் டார்.

கடந்த 2023ஆம் ஆண்டு மாத்திரம் இலங்கையில் பொலிஸாருக்கு எதிராக மொத்தம் 2,448 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பொலிஸாரின் செயலற்ற தன்மைக்காக 810 முறைப்பாடுகளும், அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதற்காக 563 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், பாரபட்ச செயற்பாடு தொடர்பில் 450 முறைப்பாடுகளும், லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பாக 112 முறைப்பாடுகளும், பொய்யான குற்றச்சாட்டுகளை உருவாக்கியதற்காக 93 முறைப்பாடுகளும், போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் தொடர்பாக 55 முறைப்பாடுகளும் பொலிஸாருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவறான நடத்தையில் பொலிஸார் ஈடுபடும் சம்பவங்கள் அடிக்கடி பதிவாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை.

பாராளுமன்றில் இரு தமிழ் எம்.பிக்கள் வடக்கில் பெரும்பான்மையான பொலிஸார் குற்றச் செயற்பாடுகளில் ஈடுபடுவதாகத் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் மீது குற்றங்கள் சுமத்தப்படும் போது அதற்கான நடவடிக்கையை எடுப்பதன் ஊடாக பொலிஸ் துறையை சிறந்த சேவையாகப் பார்ப்பார்கள். இல்லாது போனால் வேலியே பயிரை மேய்வதாகத் தான் சொல்வார்கள்.

மது போதையில் வாகனம் செலுத்துவது குற்றம் என்று மது போதையில் வாகனம் செலுத்தியவர்களை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தும் பணியில் ஈடுபடும் பொலிஸாரே மது போதையில் பொலிஸ் வாகனம் செலுத்தியது மட்டுமல்ல பொலிஸ் வாகனம் வேலியைப் பிரித்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பொறுப்பதிகாரிகளை என்னவென்று சொல்வது.

வாள்வெட்டில் ஈடுபடும் சம்பவங்கள் உள்ள இடத்தில் பொலிஸாரும் வாளுடன் வந்ததாக செய்திகள் வெளிவந்தன.

குற்றங்கள் இடம்பெறும் இடத்தில் குற்றவாளிகளாக பொலிஸார் நிற்கக் கூடாது. அப்படி நிற்பார்களானால் குற்றங்கள் குறைய வாய்ப்பில்லை கூடிக் கொண்டே போகும்.

அந்த பொலிஸ் காக்கி சட்டைக்கு மரியாதை அளிக்க வேண்டும்.

மாணவர்களிடம் படித்து என்னவாக வரவேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்று கேட்டால் பொலிஸ் சேவையில் ஈடுபட்டு நாட்டில் குற்றங்கள் நடைபெறுவதை தடுப்பேன் என்று சொல்வார்கள்.

ஆனால் இங்கே நடக்கும் சம்பவங்களைப் பார்த்தால் பொலிஸ் சேவைக்கு வருவதற்கு தயங்குவார்கள்.

அண்மைய பதிவுகள்