எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் கப்பலின்கெப்டன் மற்றும் கொழும்பு துறைமுக மாஸ்டர் ஆகியோர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்கிய வாக்குமூலங்களின் பிரதிகள் இன்று (09) உயர் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.
கர்தினால் மெல்கம் ரஞ்சித் மற்றும் மீனவ சமூகம் உள்ளிட்டோரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீது சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே இந்த அறிவிப்பை விடுத்தார்.
இந்த மனுக்களை முர்து பெர்னாண்டோ, யசந்த கோதாகொட, ஷிரான் குணரத்ன, அச்சல வெங்கப்புலி மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய ஐவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இன்று (09) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கப்பல் விபத்து தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் கப்பலின் கப்டன் மற்றும் கொழும்பு துறைமுக பொறுப்பதிகாரி ஆகியோர் வழங்கிய வாக்குமூலங்களின் பிரதிகள் ஏற்கனவே உள்ளதாக சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். முன்பு நீதிமன்றம் வழங்கிய உத்தரவின்படி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், துறைமுக மாஸ்டர் மற்றும் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் பொது முகாமையாளர் ஆகியோரின் வாக்குமூலங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த விபத்தினால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்குமாறு இங்கிலாந்தில் தொடரப்பட்ட வழக்கு தொடர்பான ஆவணங்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பில் கருத்து வௌியிட்ட சொலிசிட்டர் ஜெனரல், இச்சம்பவம் காரணமாக அனைத்து தரப்பினருக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நீதி கிடைக்கும் வகையில் இந்த சம்பவம் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் ஐக்கிய இராச்சியம் மற்றும் சிங்கப்பூரிலும் வழக்குத் தொடர்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.
குறித்த மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் முன்னாள் தலைவி தர்ஷனி லஹந்தபுர நீதிமன்றில் சாட்சியமளித்தார். இந்த வழக்கு தொடர்பான உண்மைகளை முன்வைப்பதில் முரண்பட்ட காரணிகள் காணப்படுவதாகவும், இது தொடர்பான முக்கிய விடயங்கள் முன்வைக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
எனவே, இது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய கால அவகாசம் அளிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.
வழக்கின் உண்மைகளை பரிசீலித்த ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம், உரிய ஆவணங்களை இம்மாதம் 23ஆம் திகதிக்கு முன்னர் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கடல்சார் ஊழல் தடுப்பு அதிகார சபையின் முன்னாள் தலைவருக்கு உத்தரவிட்டது.
மேலும் மனுக்கள் மீதான விசாரணையை நவம்பர் 5ஆம் திகதிக்கு ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.