பிரித்தானியாவிலிருந்து தீவிரவாத அமைப்புக்கு பணம் வசூலித்ததாக கைது செய்யப்பட்ட பிரித்தானிய தமிழ் பிரஜையை விடுதலை

3 weeks ago



பிரித்தானியாவிலிருந்து தீவிரவாத அமைப்புக்கு பணம் வசூலித்ததாக குற்றம் சுமத்தப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட பிரித்தானிய தமிழ் பிரஜையை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த வழக்கு இன்று (17) கொழும்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உலகத் தமிழ் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் மற்றும் உலகத்தமிழர் பேரவையின் நிர்வாகிகளுடன் இணைந்து குறித்த பிரித்தானிய பிரஜை பயங்கரவாத அமைப்பின் மீளுருவாக்கத்திற்கு நிதி திரட்டி இலங்கைக்கு அனுப்பியதாக 2012 ஆம் ஆண்டு குற்றப்புலனாய்வு பிரிவினரால் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதுடன் அவருக்கெதிராக பயணத்தடையும் விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அவர் இலங்கைக்கு திரும்பியபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து 30.11.2024 அன்று கைது செய்யப்பட்டிருந்தார்

சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், 

“உலகத் தமிழ் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் மற்றும் உலகத் தமிழர் பேரவையின் நிர்வாகிகளுடன் இணைந்து பிரித்தானிய பிரஜையான குறித்த நபர், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் மீள் உருவாக்கத்திற்காக நிதி திரட்டி இலங்கைக்கு அனுப்பியதாக 2012 ஆம் ஆண்டு குற்றப் புலனாய்வு பிரிவினரால் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதுடன் அவருக்கெதிராக பயணத்தடையும் விதிக்கப்பட்டிருந்தது.

பிரித்தானிய பிரஜையான விஜயசுந்தரம் சங்கர் தனது தாயாரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக கடந்த நவம்பர் மாதம் 30 ஆம் திகதி இலங்கை வருகை தந்தபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்ற புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு இன்று கொழும்பு நீதவான் மன்றில் எடுத்தும் கொள்ளப்பட்டபோது சந்தேக நபர் சங்கர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராசா தனது வாதத்தில் இந்த சந்தேக நபரை கைது செய்தமை சட்டரீதியற்ற கைது என்றும் 2009 ஆண்டு யுத்தம் மௌனிக்கபட்ட பின்னர் பல நூற்றுக்கணக்கான அப்பாவிகள் கைது செய்யப்பட்ட பொழுது இந்த சந்தேக நபரும் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு இவர் மீது எந்தக் குற்றச்சாட்டும் சுமந்த முடியாத நிலையில் விடுதலை செய்யப்பட்டார் என்றும் கூறியுள்ளார்.

அதன் பின்னர் 2010 ஆம் ஆண்டு பிரித்தானியாவுக்கு பயணமாகிய இவர் பிரித்தானிய பிரஜா உரிமையும் பெற்றுக்கொண்டார்.

பொலிஸார் 2012 இல் சந்தேக நபர் சங்கருக்கு எதிராக நிதி சேகரித்ததாக நீதிமன்றில் அறிக்கையை தாக்கல் செய்து விசாரணை செய்த போதிலும் 2024 ஆம் ஆண்டு கைது செய்யப்படும் வரை இவருக்கெதிராக பொலிஸ் விசாரணையில் நீதிமன்றில் எவ்வித சான்றுகளும் முன்வைக்கப்படவில்லை.

சந்தேக நபர் எந்த குற்றதை புரிந்தார் என்பதை பொலிஸார் நீதிமன்றில் தாக்கல் செய்த அறிக்கைகளில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும், 2010 ஆம் ஆண்டிலிருந்து 2024ஆம் ஆண்டு கைது செய்யப்படும் வரை சந்தேக நபர் இலங்கைக்கு எந்த விஜயமும் மேற்கொண்டிருக்கவில்லை.

இதை நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டு வந்ததுடன் மேலும் தனது வாதத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா இவ்வாறான சட்டரீதியற்ற கைதுகளினால் புலப்பெயர் தமிழர்களின் வெளிநாட்டு முதலீடுகள் குறைவடைவதுடன் சுற்றுலாத்துறையிலும் பாரிய பாதிப்புகள் ஏற்படுவதுடன் இது இலங்கை பொருளாதாரத்தில் வீழ்ச்சியையும் ஏற்படுத்தும் என்பதனையும் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

அண்மைய பதிவுகள்