சிறிலங்கா தேர்தலை எதிர்கொள்வதைத் தவிர வேறு வழி உண்டோ?

ஓஸ்லோ உடன்படிக்கை புலிகளின் ஆயுதப் போராட்ட பலத்தால், மக்களின் அளப்பரிய தியாகத்தால், இழப்புகளால் விளைந்தது.

அந்த போராட்டம் அழிக்கப்பட்டு இனப்படுகொலை அரங்கேற்றப்பட்டதை நினைவுகூரும் கஞ்சிவழங்குவதற்கு கூட தடை என்பது இன்றைய நிலை.

தமிழரசுக்கட்சியால் தலைவராக தெரிவுசெய்யப்பட்டவர் சிறட்டையோடு நாடாளுமன்றத்தில் நிற்பது இன்றைய நிலையை தெளிவாக உணர்த்தும் குறியீடு.

இத்தகைய நிலைக்கு காரணம் தமிழ் மக்களிடத்தில் பலம் இல்லை என்பது.

ஜனநாயக வழியில் பலம் என்பது ஒற்றுமை. தமிழ் மக்களிடத்தில் ஒற்றுமையை ஏற்படுத்த அதனை வெளிக்காட்ட ஜனாதிபதித் தேர்தலை பயன்படுத்துவது என்பது ஒரு நிகழ்கால வாய்ப்பு.

அதனை எவ்வாறு செய்யலாம் என்று சிந்திப்பதற்கு பதிலாக, பொதுவேட்பாளர் விடயத்தை கைவிட வைக்க முதலைக்கண்ணீர் வடிக்கப்படுகிறது.

ஒருவேளை பொதுவேட்பாளர் நிறுத்தப்பட்டு தமிழ்மக்களின் ஒற்றுமைக்கு வழியேற்படுத்த முயற்சிக்காவிட்டால் இந்த தேர்தல் தமிழ் மக்களை பலகூறுகளாக பிளக்கும் ஆபத்தை எவ்வாறு எதிர்கொள்வது?

எல்லோரும் சேர்ந்து ரணிலிற்கு வாக்களிப்பதா? எல்லோரும் சேர்ந்து சஜித்திற்கு வாக்களிப்பதா? எல்லோரும் சேர்ந்து அனுரவிற்கு வாக்களிப்பதா? எல்லோரும் சேர்ந்து புறக்கணிப்பதா? அறிவு, அனுபவம், யதார்த்தம் சார்ந்து எது மிகப்பொருத்தம் என்று சிந்திக்கவேண்டிய கடமையும் பொறுப்பும் அனைவருக்கும் உண்டு.

கடந்த பதினைந்து வருடத்தில் கட்சிகளின் பிளவே பெரிதாக வெளிப்பட்டது. மக்களை ஓரணியில் திரட்ட தவறும்பட்சத்தில் ஆட்டுக்குட்டிகளை வேட்டையாடும் ஓநாய்கள் போல தமிழ் மக்கள் பிய்த்தெறியப்படுவார்கள். இந்த தேர்தலோடு மக்களின் பிளவும் பெரிதாக வெளிப்பட ஆரம்பிக்கும் என்ற அபாயத்தை புரிந்து செயலாற்றவேண்டியிருக்கிறது.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தேய்ந்து, சிதைந்து இன்று தமிழரசுக்கட்சியும் சிதைந்துபோகும் நிலையில் இருப்பதற்கு சம்பந்தர் ஐயாவே முதற் பொறுப்பு.

முள்ளிவாய்க்கால் முடிந்தவுடன் நாம் பலம் இழந்துவிட்டோம் என்பதை உணர்ந்து அடுத்துவந்த தேர்தலில் தானே பொதுவேட்பாளராக நின்று தமிழ் மக்களை ஒரு தேசமாக திரட்டியிருந்தால் இன்று இந்த விவாதங்களிற்கான தேவையே இருந்திருக்காது.

மாறாக அவர் இன்று குறிப்பிட்டதாக சொல்லப்படும் ஒஸ்லோவைக் கொண்டுவந்த புலிகளை அழித்ததற்காக நாடாளுமன்றத்தில் மகிந்த ராஜபக்சவிற்கு பாராட்டுப்பத்திரம் வாசித்திருந்தார் என்பதை மக்கள் மறந்திருக்கமாட்டார்கள்.

ஒஸ்லோபற்றி சம்பந்தர் ஐயா சொன்னார் என்று வந்திருக்கும் கட்டுரை அல்லது செய்தி யாரால் எழுதப்பட்டது? எங்கிருந்து வந்திருக்கிறது? என்பதை ஆராய்ந்து பாருங்கள் பல உண்மைகள் உங்களிற்கு புரியும். (அந்தச் செய்தியின் உண்மையான எழுத்தாளர் யார் என்பது அரசியல் வட்டாரங்களில் இருக்கும் பெரும்பாலானவர்களிற்கு தெரியும்)

இரண்டு வார்த்தைகூட சுயநினைவோடு பேசமுடியாத சம்பந்தர் ஐயா சொன்னார் என்பது முதல் பொய்.

ஒருவேளை அவர் சொன்னாலும் தமிழ் மக்களைத் தேசமாக திரட்டத் தவறியவர், தன்கட்சியையே காப்பாற்ற தவறியவர், குறிப்பாக முள்ளிவாய்க்கால் பேரழிவிற்கு பின்னர் நாடாளுமன்றத்தில் மகிந்தராஜபக்சவிற்கு பாராட்டுப்பத்திரம் வாசித்தவர் என்ற அடிப்படைகளில் அதனைச் சொல்லும் தகுதியை இழந்திருப்பவர்.

பொதுவேட்பாளர் முன்னிறுத்தப்பட்டால் அதனை எதிர்த்து தென்னிலங்கை வேட்பாளர்களை நியாயப்படுத்தி வாக்கு சேகரிப்பது சிரமம்.

பொதுவேட்பாளர் முன்னிறுத்தப்படாவிட்டால் தென்னிலங்கை வேட்பாளர்களில் யார்சிறந்தவர் என்ற வாதமே இருக்கும். அந்நேரத்தில் தென்னிலங்கை வேட்பாளர்கள் தேர்தல் கூட்டங்களில் காற்றோடு காற்றாக அள்ளிவிடும் கவர்ச்சிகரமான வார்த்தைகளை (உடன்படிக்கைகள் அல்ல) காட்டி வாக்குகளை அள்ளமுடியும்.

ஆகையால் பொதுவேட்பாளர் விடயத்தை கருவிலேயே சிதைக்கமுற்படுபவர்கள் யார் யார் என்பதை ஆராய்ந்து பாருங்கள். அவர்களின் வியூகம் என்ன என்பது உங்களுக்கு புரியும்.

இங்கே எல்லோருமாக சிந்திக்கவேண்டிய முக்கிய விடயமாக பொதுவேட்பாளர் நிறுத்தப்படாவிட்டால் தோன்றப்போகும் சிதைவு என்ன என்பதும், பொதுவேட்பாளர் மூலமாக ஒற்றுமையை கொண்டுவந்து தமிழ் மக்களை ஒரு ஜனநாயக சக்தியாக, தேசமாக திரட்டவேண்டும் என்பதும் இருக்கின்றது.

நிகழ்காலத்தைக் கையாளாமல் கடந்தகாலத்தை மட்டுமே பேசிக்கொண்டிப்பவனிற்கு எதிர்காலம் என்ற ஒன்று இருக்காது என்ற பொன்மொழியே தமிழ் மக்களிற்கும் தலைவர்களிற்கும் இன்று பொருத்தமாக இருக்கிறது.

பலத்தை நிரூபித்தால்தான் ஒஸ்லோபற்றி சிந்திக்கமுடியும் என்பது வரலாறு சொல்லும் பாடம். இல்லாவிட்டால் இன்று சிரட்டையோடு பாராளுமன்றித்தில் நிற்கும் தலைவர்கள் நாளை கோவணத்தோடோ அல்லது அம்மணமாகவோ யார் அறிவார்? ஒற்றுமையே வாழ்வு. பலமே மரியாதை.

எமது மக்களது அளப்பரிய இழப்புகளாலும் தியாகங்களாலும் உருவாக்கப்பட்ட ஒஸ்லோ பிரகடனத்தை கடந்த பதினைந்து வருடமாக பலவீனப்படுத்தியிருப்பது யார்? பதின்மூன்றையே நடைமுறைப்படுத்த முடியாமல் ஒரு சிறட்டையையாவது ஞாபகத்திற்கு வைத்திருக்க முடியுமா எனக்கேட்கும் நிலையில் வீழ்ந்து கிடக்கும் தமிழ்த்தேசிய அரசியலை மீள் நிறுத்தி தமிழ்த்தேசம் மீதான சிறீலங்கா அரசின் தீவிரமடையும் கட்டற்ற அடக்குமுறையினை எதிர்த்து தமிழர் பிரச்சனைக்கான தீர்வை முன்னிறுத்த தமிழ் மக்களாக இணைந்து சிறீலங்காவின் ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்வதைத் தவிர வேறு சிறந்த வழிகள் ஏதேனும் உண்டா?