அச்சுறுத்தல் ஏற்பட்டால் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த தயார் - ரஷ்யாவின் ஜனாதிபதி விளாமிர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்

7 months ago

'எங்கள் நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தவும் நாங்கள் தயாராக இருக்கின்றோம்' இவ்வாறு ஜேர்மனி உள்ளிட்ட மேற்குலக நாடுகளுக்கு ரஷ்யாவின் ஜனாதிபதி விளாமிர் புடின் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இதில், இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

உக்ரைனுக்கு, அமெரிக்கா மற்றும் ஜேர்மனி, இங்கிலாந்து போன்ற சில ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியது. இதன்போது, ஜேர்மனி நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன.

ரஷ்யாவின் மீது தாக்குதல் நடத்த ஜேர்மனியின் ஆயுதங்களை உக்ரைன் பயன்படுத்தியிருப்பது, ஆபத்து ஏற்படுத்தும் நடவடிக்கை என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார்.

மேற்கு நாடுகளைத் தாக்க நீண்டதூரம் சென்று தாக்கக் கூடிய ஆயுதங்களை, வேறு சில நாடுகளுக்கு ரஷ்யா வழங்கக் கூடும் என்று எச்சரிக்கை விடும் வகையிலும் புடின் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவுக்கு எதிராகத் தாக்குதலில் ஈடுபட்ட உக்ரைன், ஜேர்மனியின் ஆயுதங்களைப் பயன்படுத்தியுள்ளது எனக் கூறப்படுகிறது.

இந்தக் குற்றச்சாட்டை தெரிவித்த ரஷ்யா, ஜேர்மனிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

'எங்களுடைய நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் எனத் தெரியவந்தால், அணு ஆயுதங்களைப் பயன்படுத்தவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்' என புடின் மீண்டும் உறுதிப்படக் கூறியுள்ளார்.

ரஷ்யாவின் சில பகுதிகள் மீது நீண்டதூரம் சென்று தாக்கக்கூடிய ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்குவதற்கு அமெரிக்கா மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகள் அண்மையில் அங்கீகரித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது