அமெரிக்காவிடம் இருந்து 32,000 கோடி ரூபாய் மதிப்பில் 31 ட்ரோன்களை வாங்க இந்தியா ஒப்பந்தம்
சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள அமெரிக்காவிடம் இருந்து 32,000 கோடி ரூபாய் மதிப்பில் 31 ப்ரீடேட்டர் ட்ரோன்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.
அமெரிக்க தயாரிப்பான எம். க்யூ - 9 பி ப்ரீடேட்டர் ட்ரான்களை தற்போது அமெரிக்கா, அதன் நட்பு நாடுகள் மற்றும் நோட்டோ நாடுகள் சில பயன்படுத்துகின்றன.
செயற்கைகோள் கட்டுப்பாட்டில் நீண்டநேரம் பறக்கும் இந்த ட்ரோன்கள் ஆப்கானிஸ்தான் உட்பட சில நாடுகளில் மிகத் துல்லிய தாக்குதல்களை நடத்தியுள்ளன.
ரிமோட் மூலம் இயக்கப்படும் இந்த 'ஹன்ட்டர் -கில்லர்' ட்ரோன்கள் 'ஹெல்பயர்' ஏவுகணைகள் மற்றும் ஜி. பி. யு. 39 பி குண்டுகளை வீசும் திறனுடையது.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீன போர்க் கப்பல்களின் போக்குவரத்து அதிகரித்துள்ளது.
அதனால், கண்காணிப்பு பணிக்கு ப்ரீடேட்டர் ட்ரோன்களை ஈடுபடுத்த இந்தியா உத்தேசித்துள்ளது.
முப்படை பயன்பாட்டுக்கு 31 ப்ரீடேட் டர் ட்ரோன்களை, ஆயுதங்களுடன் அமெரிக்காவிடம் இருந்து வாங்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
இதையடுத்து இந்தியா - அமெரிக்கா இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.