சரக்கு விமான சேவைகள் மூலமாக நாட்டுக்கு அனுப்பப்பட்ட 18 கோடி ரூபாய் பெறுமதியான கொக்கைன் மற்றும் குஷ் ஆகிய போதைப்பொருட்கள் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த போதைப்பொருட்கள் தயிரில் இருந்து எடுக்கப்பட்ட புரதங்களின் பவுடர் என கூறி அனுப்பப்பட்டுள்ளன.
சீதுவையில் உள்ள வெளிநாடுகளுக்கு பொதிகள் அனுப்பும் சேவை நிறுவனம் ஒன்றிலிருந்து இந்தப் போதைப்பொருட்களை சுங்கத் திணைக்கள போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
அவற்றில், 2 கிலோ கிராம் 30 கிராம் கொக்கைன் மற்றும் 2 கிலோ கிராம் 177 கிராம் கஞ்சா வகை குஷ் போதைப்பொருட்கள் இருந்ததாக சுங்க ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட சுங்கப் பணிப்பாளர் சீவலி அருக்கொட தெரிவித்தார்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த பெறுமதி 18 கோடியே 56 இலட்சத்து 40,000 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த போதைப்பொருள் பொதிகள் கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து கடவத்தை மற்றும் கொழும்பு ஆகிய இரண்டு முகவரிகளுக்கு ஒரு மாதத்துக்கு முன்னர் அனுப்பப்பட்டதாகவும், ஆனால் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அந்த முகவரிகள் போலியானவை என உறுதிப்படுத்தப்பட்டதாகவும் மேலதிக விசாரணைகளுக்காக இந்தப் போதைப் பொருட்கள் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்படும் எனவும் சுங்கத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.